ஒரே நேர்க்கோட்டில் 4 கிரகங்கள்.. 144 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்.. உலகே இந்தியாவை திரும்பி பார்க்கும்
மகா கும்பமேளாவை ஒட்டி உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது... இதுபற்றிய செய்தித் தொகுப்பைக் காணலாம்...
மகா கும்பமேளா...4 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் சமயம்...144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஓர் அதிசயம்...வாழ்நாளில் ஒருமுறையேனும் இதைக் கண்டுவிட மாட்டோமா என ஏங்குவோர் ஏராளம்...!
ஜனவரி 13ம் தேதி துவங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை நிகழும் இந்த மகா கும்பமேளாவில் கிட்டத்தட்ட 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது...
பௌஷ் பூர்ணிமாவுடன் மகா கும்பமேளா கோலாகலமாகத் துவங்கிய நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜில் கங்கையும், யமுனையும், சரஸ்வதியும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் அதிகாலை கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் புனித நீராடினர்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி மகா கும்பமேளாவில் குவிந்த நிலையில், மனமுருக பக்திப் பாடல்கள் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பவெல் ஜாப்ஸ், கமலா என்ற இந்து பெயருடன் கும்பமேளாவில் கலந்து கொள்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது... இந்தியா மட்டுமல்ல...கடல் கடந்து வந்து பிரேசில், ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் புனித நீராடியது அவர்கள் நம் பாரம்பரியத்தின் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தியது...
அலைகடலென பக்தர்கள் திரண்டுள்ள நிலையில் CRPF, RAF வீரர்கள், காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்... நடந்தும், குதிரைகள் மேல் அமர்ந்து சென்றும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்... அதேபோல் படகுகளில் பயணித்தும் பக்தர்களை பாதுகாத்து வருகின்றனர் பாதுகாப்புப் படை வீரர்கள்...நீரில் மிதக்கும் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு...
ஆன்மீக பலனைப் பெற கோடிக்கணக்கான பக்தர்கள் வரும் நாள்களில் குவியப்போகும் நிலையில் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது இந்த மகா கும்பமேளா...!