ஒரே இடத்தில் திரண்ட திமுக,காங்., பாஜக - பரபரப்பு காட்சிகள்
பஹ்ரைன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நெல்லை மீனவர்களை வரவேற்க அரசியல் கட்சியினர் போட்டி போட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, பஹ்ரைன் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்து. இந்திய அரசின் வெளியுறவுத் துறை மூலமாக பஹ்ரைன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அவர்களின் தண்டனை காலம் 3 மாதங்களாக குறைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய மீனவர்களை வரவேற்க தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தலைமையில் திமுகவினரும், திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புரூஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினரும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம் ஆர் காந்தி தலைமையில் பாஜக கட்சியினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.