சுவாமி தயானந்த சரஸ்வதியின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேசிய கல்விக் கொள்கை உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள தங்காராவில் அவர் பிறந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். சுவாமி தயானந்தர் குஜராத்தில் பிறந்தவர் என்றும், ஹரியானாவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார் எனவும் குறிப்பிட்ட பிரதமர் இரு பிராந்தியங்களுடனும் தமக்குள்ள தொடர்பை எடுத்துரைத்தார்... அவரது போதனைகள் தமது நடவடிக்கைகளை வடிவமைத்துள்ளதாகவும், அவரது மரபு தமது பயணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்றும் பிரதமர் கூறினார். தயானந்த சரஸ்வதியின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேசிய கல்விக் கொள்கை உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம், தற்சார்பு இந்தியா, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், நீர் பாதுகாப்பு, தூய்மை இந்தியா, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் ஆர்ய சமாஜத்தின் மாணவர்கள் மற்றும் நிறுவனங்கள் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முதல் முறை வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண்களின் உரிமைகளுக்காக சுவாமி தயானந்தா குரல் கொடுத்ததைப் பாராட்டிய பிரதமர், நேர்மையான முயற்சிகள் மற்றும் புதிய கொள்கைகள் மூலம், நாடு தனது மகள்களை முன்னேற்றுகிறது என்று கூறி, சமீபத்திய மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா குறித்துப் பேசினார்.