இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு... டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கொடுத்த அப்டேட்! | Delhi | AIIMS
இதய செயலிழப்பு அபாயம் உள்ளவர்கள் இன்புளூயன்சா தடுப்பூசியை செலுத்தி கொண்டால்
மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சைக்கான நிபுணர் குழு ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையை லான்செட் மருத்துவ ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 30 சென்டர்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2015 முதல் 2021 வரை சுமார் 7 ஆண்டுகளுக்கு நடத்தப்பட்ட இந்த ஆய்வுக்கு மேற்கண்ட நாடுகளை சேர்ந்த ஐயாயிரத்து 129 பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் பலவீனமான இருதய செயல்பாடு மற்றும் பல முறை இதய செயலிழப்புக்கு ஆளானோர் இன்புளூயன்சா தடுப்பூசியை செலுத்தி கொண்டால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பது தெரியவந்துள்ளது.
குளிர்காலங்களில் பரவும் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு ஆளாகும் பலரும் குறுகிய காலகட்டத்தில் எளிதில் இதயநோய்க்கு ஆளாகி இறக்க கூட நேரிடுவதை அந்த ஆய்வறிக்கை சுட்டி காட்டியுள்ளது.
இதனால் ஏற்கனவே இதய நோய்க்கு ஆளாகியிருந்தாலும், இன்புளூயன்சா தடுப்பூசி எடுத்து கொள்ள அந்த குழு பரிந்துரைக்கிறது.
அதோடு, இன்புளூயன்சா தடுப்பூசியை எடுத்து கொள்வதன் மூலம் 28 சதவீத வரை மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.