சிறுமியின் உயிரை காப்பாற்ற ஒரு மருத்துவமனையும் கைகொடுக்காத சோகம் - தென்காசியில் நடந்த கோர சம்பவம்

Update: 2023-05-19 08:19 GMT

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து காயம் அடைந்த சிறுமி, பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவிலை அடுத்த கீழஅழகு நாச்சியாபுரத்தை சேர்ந்த முத்துக்குமாரின் மகள் மனோசியா, நான்காம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையை ஒட்டி, வீட்டின் அருகே உள்ள கோவிலின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, இரும்பு கம்பிகள் மீது தவறி விழுந்ததில் காயம் அடைந்தார். அவரை அவரது பெற்றோர், குருவிகுளம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர்களின் பற்றாக்குறையால் அங்கு மருத்துவர் பணியில் இல்லை என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை மோசமானதால், அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறுமியை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இருந்து உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் சிறுமியை காப்பாற்றி இருக்க முடியும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்