ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆறு தினங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் அருகே பேராவூர் கிராமம் மேற்குப் பகுதியில் 50 வீடுகள் உள்ள நிலையில், மழை நீர் சூழ்ந்து சுமார் ஒரு வார காலமாக வடியாமல் உள்ளதால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடியிருப்பு பகுதியிலிருந்து இடுப்பளவு தண்ணீரில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து முக்கிய சாலைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் இடுப்பளவு தண்ணீரில் புத்தகப்பைகளை சுமந்து செல்கின்றனர். மழைநீர் வடியாததால் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷச்பூச்சிகள் வீட்டுக்குள் வருவதாகவும், அதனால் தூக்கமின்றி தவிப்பதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.