"என் 9 வயசு மகளை கடத்திட்டாங்க காப்பாத்துங்க..." - நடுரோட்டில் கதறிய பெண்ணால் பெரும் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, தனது 9 வயது மகளை கடத்தி சென்றுவிட்டதாக கூறி குழப்பத்தை ஏற்படுத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்துமேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதி வாசலில் செல்வி என்ற பெண் கதறி அழுதார். அவர் தனது 9 வயது மகளை கடத்தி விட்டார்கள் என்றும், யாராவது காப்பாறுங்கள் என்றும் கூச்சல் போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், யார் கடத்தினார்கள்? என விவரம் கேட்டனர். அதற்கு எனது கணவர் கடத்தினார், கடன் கொடுத்தவர் கடத்தினார் என்று சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பதில் அளித்தார். இதனால் அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்தனர். மேலும் பேசிய அந்த பெண், இந்த விடுதியில் தனது மகளை கடத்தியவரின் செல்போன் எண் இருக்கும்... அதற்கு போன் செய்து எனது மகளை காப்பாற்றுங்கள் என கெஞ்சினார். அப்பகுதி மக்கள் போலீசாரை வரசொல்கிறோம் என தெரிவித்தவுடன், எனக்கு போலீஸ் வேண்டாம் எனது மகள் தான் வேண்டும் என கத்தினார்.
தகவலின் பேரில் வந்த போலீசார், அந்த பெண்ணை விசாரித்தனர். அவர்களிடமும் முறையாக எந்த பதிலும் சொல்லாமல், அந்த பெண் போக்குகாட்டினார். இதனையடுத்து, அந்த பெண்ணை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். பிறகு மறுநாளும் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அந்த பெண் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் முதலில் பதற்றத்தையும் பிறகு குழப்பத்தையும் அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியது.