கம்யூட்டர் பற்றி முதல் முறையாக தமிழில் எழுதிய எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் இன்று.....

Update: 2023-05-03 09:14 GMT

கம்யூட்டர் பற்றி முதல் முறையாக தமிழில் எழுதிய எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் இன்று.....

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட சுஜாதா, 1935இல் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார். ஸ்ரீரங்கத்தில் பள்ளிக் கல்வியை முடித்த பின், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பள்ளி நாட்களில் கையெழுத்து பத்திரிக்கை நடத்தி, கதைகள் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டினார்.சென்னை எம்.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரியில், எலக்ட்ரானிக்ஸ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். அவரது வகுப்பு தோழர் அப்துல் கலாம்.

மத்திய அரசு பணியில் சேர்ந்த சுஜாதா, டெல்லியில் பணியாற்றிய பின், பெங்களூருவில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். ரேடார்கள் பிரிவிலும், பின்னர் எலக்ட்ரானிக் வாக்கு பதிவு எந்திரத்தை வடிவமைப்பதிலும் சிறப்பாக பணியாற்றினார். 1962இல் அவரின் முதல் சிறுகதை வெளியானது. பின்னர் அவரின் மனைவியின் பெயரை புனைப் பெயராக சூடிக் கொண்டு, தொடர்ந்து எழுதிக் குவித்தார்.

துப்பறியும் கதைகள், அறிவியல் கதைகள், நாவல்கள், நாடகங்கள், திரைப்படங்களுக்கு கதை வசனம் ஆகியவற்றை எழுதினார். எலக்ட்ரானிக்ஸ், கம்யூட்டர்கள் பற்றி 1980 முதல் எளிய முறையில் எழுதி, பெரும் பாராட்டுகளை பெற்றார். இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

புறநானூறு, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களை புதுக் கவிதை பாணியில், எளிய முறையில் மறு ஆக்கம் செய்து, சாதனை படைத்தார். திருக்குறளுக்கு உரை எழுதினார். சம கால நிகழ்வுகள், இலக்கிய விமர்சனம், திரைபட விமர்சனம், அறிவியல் கேள்வி பதில்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுரை தொடர்களை எழுதினார்.

அறிவியலை, ஊடகம் மூலமாக, மக்களிடம் கொண்டு சென்றதற்காக, தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993இல் விருது வழங்கிக் கெளரவித்தது.

அவரின் எழுத்துப் பணியைப் பாராட்டி, தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது அளித்தது. 2008இல் உடலநலக் குறைவு காரணமாக, 72 வயதில் காலமானர்.

தமிழ் இலக்கியத் துறையில் முத்திரை பதித்த, எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம், 1935, மே 3.

Tags:    

மேலும் செய்திகள்