"திருப்பதியில் அக்காவ சைட் அடிச்சி டிடிஎஃப் சொன்ன கம்பி கட்டும் கதை" - தமிழ்நாடு போலீசை வம்பிழுத்த புது வீடியோ
திருப்பதியில் பக்தர்களிடம் பிராங்க் செய்து சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன் மீது, போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வழக்குகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் டிடிஎஃப் வாசன், ஆந்திராவிலும் வாங்கி வந்த வழக்கு குறித்து பார்க்கலாம் விரிவாக...
ஆப்பு எங்கே என தேடித் தேடி உட்காரும் ஒரே நபர் இவர் தான் என சொல்லும் அளவுக்கு டிடிஎப் வாசன் செய்து வைத்திருக்கும் சம்பவங்கள் ஏராளம்...
ஒன்றா... இரண்டா கேஸ்கள்.. அத்தனையும் அவரை தேடி வந்ததல்ல.. எல்லாமே அவராக தேடிப்போனது.. இப்படி வழக்கும், வம்புமாகவே இருந்து வந்த வாசன் இப்போது சிக்கியிருப்பது ஆந்திர போலீசாரிடம்..
உள்ளூரில் வாங்கிய கேஸ்களுக்கே அலைந்து திரிந்து வரும் டிடிஎஃப் வாசன், திருப்பதி சென்று அங்கு பக்தர்களிடம் வம்பிழுத்து வாண்டடாக ஒரு கேஸ்-ஐ விலைக்கு வாங்கியுள்ளார்.
நண்பர்களுடன் காரில் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி சென்ற டிடிஎஃப் வாசன், கோவிலுக்கு சென்றோமா தரிசனத்தை முடித்தோமா என இல்லாமல், அதை விளையாட்டாக யூட்யூபில் போட, வினையாக முடிந்திருக்கிறது...
ஏழுமலையானை தரிசிக்க வரிசையில் நின்றிருந்த போதும், சேட்டைகளை செய்த வாசன் அன்ட் கோ, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த தவறவில்லை...
அதிலும், வரிசையில் நிற்பது குறித்து கிண்டலடித்து வந்த வாசன் மற்றும் அவரது ஆருயிர் நண்பர் அஜிஸ், தமிழக போலீசார் குறித்து பேசியதெல்லாம் தரமான சம்பவம்..
இது மட்டுமா, ப்ராங்க் செய்தால் உள்ளே பிடித்து போட்டு விடுவார்கள் என நண்பன் அறிவுறுத்த இதென்ன தமிழ்நாடா என தனக்கே உரிய பாணியில் பேசினார் டிடிஎஃப் வாசன்..
இப்படி அடுத்தடுத்து சர்ச்சை பேச்சுகளாக பேசி வந்த இருவரும், பக்தர்களிடம் பிராங்க் செய்தது தான் பலரையும் கொதிக்க செய்தது...
இச்சம்பவத்தால் பக்தர்கள் கொந்தளிக்க, திருப்பதி தேவஸ்தானம் டிடிஎஃப் வாசன் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்திருந்தது...
நிலைமை கைமீறி போவதை அறிந்த வாசன், தனது யூடியூப் பக்கத்தில் ஒரு விளக்க வீடியோ வெளியிட்டு, மன்னிப்பும் கேட்டிருந்தார்.
இதென்ன பிரமாதம் இத விடை ஸ்பெஷலா ஒண்ணு இருக்கு தெரியுமா என்ற தொணியில், தாங்கள் செய்தது பிராங்கே இல்லை ரீகிரியேட்டீவ் வீடியோ என்றும் கூறியிருந்தார்..
ஆனா கம்பி கட்டுற கதையை நாம கேட்கலாம்.. போலீஸ் கேட்குமா என்ன? இதன் விளைவு இப்போது வாசன் மீது வழக்கு...
தேவஸ்தானம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வாசன் மீது திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் செக்சன் 299 அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தரிசனத்திற்கு செல்லும் வழியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் எல்லாம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. செல்போனை கையில் வைத்துக் கொண்டு அவர் என்னவெல்லாம் பேசினார்..? என்னவெல்லாம் செய்தார்? என அக்குவேறு ஆணி வேராக எடுத்து விடுவார்கள்...
வரிசையில் நின்ற போது ஒரு பெண் குறித்து வாசன் பேசியதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தால் அவர் மீது இன்னும் எத்தனை வழக்குகள் பாயுமோ? என்ற கேள்வியும் எழாமல் இல்லை...
தமிழகத்தில் உள்ள வழக்குகளையே கையாள முடியாமல் திணறி வரும் சூழலில் அவரது வழக்கறிஞர்கள், தற்போது திருப்பதி மலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் கார் வழக்கில் சிக்கிய போது ஏதோ முதல்வன் பட அர்ஜூன் ரேஞ்சுக்கு நான் என்னய்யா பண்ணிட்டேன்? என ஏற்கனவே கொந்தளித்து பேசினார் வாசன்..
ஆனால் கோயிலின் உள்ளே வாசன் பேசியதையும், பக்தர்களை அவர் சீண்டியதையும் பார்த்த ஆந்திரா போலீசார் நிச்சயம் பாடம் புகட்டி விட்டு தான் தமிழகத்திற்கு அனுப்புவார்கள்...