சென்னையில் ஜிம்முக்கு வரும் இளைஞர்களுக்கு குறி.. இரண்டு பாடி பில்டர்கள் செய்த நாச வேலை
பள்ளி, கல்லூரி, வேலைபார்க்கும் இடங்கள் எனப் பல இடங்களில் பல வடிவங்களில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதைக் கண்டறிந்த போலீசார் அதன் தொடக்கப் புள்ளிகளைக் கண்டறிந்து பல்வேறு சம்பவங்களில் அவர்களைக் களையெடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து போதைப் பொருள் விற்பனை மற்றும் அதனை பயன்படுத்தியவர்கள் என 100க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் வழக்கின் பின்னணியில் போதைப் பொருள் கும்பலுடன் கள்ள கூட்டணி வைத்து வசூல் வேட்டை நடத்திய போலீசாரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து போதைக்கு எதிரான தீவிர கண்காணிப்பை மேற்கொண்ட போலீசாருக்கு பாடி பில்டர்கள் 2 பேர் மீது சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து அவர்களை ரகசியமாக கண்காணித்த போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
ராஜமங்கலம் போலீசாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் தீனா ஆகிய இருவரும் போதைப் பொருள் விற்பனை ஈடுபடுவதாக ரகசியத் தகவல் கிடைத்து இருக்கிறது. அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பிரபலமான உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து வருவதும் தெரியவந்து இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் தடைசெய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப் பொருளைப் பயன்படுத்தி வந்தது தெரியவந்து இருக்கிறது.மேலும் உடலை வலுப்படுத்த வந்த இளைஞர்களையும் மூளைச்சலவை செய்து போதைப் பொருளை ஊசி மூலம் பழக்கப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
பாடிபில்டர்கள் இருவரும் மூலக்கடையை சேர்ந்த பொதை பொருள் வியாபாரிகளான வெங்கடேஷ் மற்றும் பிரபு அகியோரிடம் இருந்து இந்தியா மார்ட் என்ற இணையதளம் மூலமாக மெத்தபட்டமைன் உள்ளிட்ட போதை பொருளை வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.
போதைப் பொருளுக்கான பணத்தை ஜி பே மூலம் செலுத்தியதும் தெரியவந்துள்ளது. வெங்கடேஷ் மற்றும் பிரபு ஆகிய இருவரையும் போலீசார் ஏற்கனவே போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
பாடி பில்டர்கள் தங்களது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து இருக்க பல்வேறு வகையான ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் பொடிகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது வழக்கமானது. ஆனால் உடற்பயிற்சி நோக்கத்தைச் சிதைத்து உடலைப் பாழாக்கும் போதைப் பொருளைப் பாடி பில்டர்கள் இருவர் பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.. விசாரணையை போலீசார் கையில் எடுத்திருக்கும் சூழலில் இதன் பின்னணி இன்னும் என்ன மாதிரியான தகவல்களை வெளிக் கொண்டு வரப்போகிறதோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது...