சென்னையில் போர் களமான திருமணம்.. தாய்மாமன் ஊர்வலத்தில் நடந்த சம்பவம்.. மரண பயத்தில் சிதறி ஓடிய உறவினர்கள்
திருமண ஊர்வலத்தில் சரியாக மேளம் வாசிக்கவில்லை என திட்டிய மணமகள் வீட்டாரை மேளக்கார இளைஞர்கள் பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
பல்வேறு மொழிகள், கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் திருமணம் என்றாலே..அதில் நடக்கக்கூடிய சடங்குகள் தொடங்கி திருமணம் முடியும் வரை நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுமே முக்கியத்துவம் பெறுகிறது.
இரண்டு குடும்பங்கள் இணையும் திருமண விழாவில், நடைபெறும்.. சந்தோஷ கலாட்டாக்கள், என்றென்றைக்கும் இருவரது உள்ளத்திலும் பசுமை மாறாத நினைவுகளாக தங்கிப் போகும்.
இது ஒரு புறம் என்றால், திருமணத்தில் சாப்பாடு தொடங்கி.. செம்பு வரை ஏற்படும் சிறிய பிரச்சனைகள் பூதாகரமாகி.. கல்யாணத்தை நிறுத்தும் அளவிற்கு சென்றதுண்டு
வடிவேலு ஒரு திரைப்படத்தில், செம்பு... கொடுத்தால் தான் திருமணம் செய்வேன்.. என்ற ஒரு நகைச்சுவை காட்சியில் நடித்திருப்பார்
இவ்வாறு திருமணத்தில் ஏற்படும் சிறிய செயல்கள் கூட திருமணத்தின் போக்கையே மாற்றி விடுகின்றன.
இந்த வரிசையில் திருமணத்திற்கு முன்பாக நடத்தப்படும் தாய் மாமன் ஊர்வலத்தின் போது நடந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முகப்பேரை சேர்ந்த டெரி என்பவரின் மகள் சரண்யாவின் திருமணத்திற்காக தாய் மாமன் ஊர்வலம் மிக விமர்சையாக நடைபெற்று இருக்கிறது.. மங்கள இசையான மேளம் இசை வாசிக்கப்பட்டு... உறவினர்கள் சந்தோஷமாக ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மேளம் வாசிக்கக்கூடிய இசைக் கலைஞர் இப்ராஹிம் மேளத்தை சரியாக வாசிக்க வில்லை என கூறி மணமகள் வீட்டார் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் வாசித்த இசையால் மணமகள் வீட்டார் கடுப்பானதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவரை, எல்லோரின் முன்னிலையில் திட்டியதால், ஆத்திரமடைந்த இப்ராஹிம், அங்கிருந்து கிளம்பி தனது நண்பருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்...
சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பி வந்த அவர், அருகில் இருந்த இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை எடுத்து, பீர் பாட்டிலில் ஊற்றி தீ வைத்த நிலையில், அதை ஊர்வலத்தில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...
ஊர்வலத்தில் பெட்ரோல் வெடி குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்ததால், மணமகள் வீட்டார் மரண பயத்தில் சிதறி ஓடினர்கள்.
இதன்பிறகு ஆத்திரம் தீராத இப்ராஹிம் கத்தியை எடுத்துக் கொண்டு டெரியை வெட்ட வந்ததாகவும் கூறப்படுகிறது..
ஊர்வலத்தில் உள்ள இளைஞர்கள் இப்ராஹிமை தடுத்த நிலையில், தனது நண்பருடன் அங்கிருந்து இப்ராஹிம் தப்பி ஒடியுள்ளார்.
வெடிகுண்டு வீச்சை சற்றும் எதிர்பார்க்காத மணமகள் வீட்டார் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், அனைவரும் கலைந்து சென்றனர். இது தொடர்பாக மணமகள் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், முகம்மது இப்ராஹிம் மற்றும் அவருடைய நண்பர் தினேஷ் இருவரையும் கைது செய்தனர்.
உற்றார், உறவினர் சூழ இரு மணங்களும் இணைந்து திருமணத்திற்கு தயரான வேளையில் அரங்கேறிய இந்த சம்பவம் மணமக்களுக்கு சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.....