புரியாத மொழியில் பேசிகொண்டிருந்த நபர்.. எதார்த்தமாக விசாரித்த போலீஸ்.. கோயில் திருவிழாவில் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்கதேசத்தைச் சேர்ந்த நபரை, திருப்பரங்குன்றம் வைகாசித் திருவிழா கூட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைகாசி விசாக திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து சாமி தரிசனம் மேற்கொண்டனர். அங்குள்ள சரவணப் பொய்கையில் சந்தேகப்படும்படி புரியாத மொழியில் ஒருவர் பேசிகொண்டு நிற்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்று விசாரித்ததில், அவர் வங்கதேசத்தின் போக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த மூசா கரிமுல்லா என்பதும், பாஸ்போர்ட், விசா எதுவுமின்றி சட்டவிரோதமாக இந்தியா வந்தது தெரிய வந்தது. அவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.