தமிழகத்தின் இப்போதைய 'KGF'.. தக்காளி சாகுபடி செய்யும் தங்க பூமி.. திண்டுக்கல் ஸ்பெஷல் உணவு பூங்கா எப்போது..?

Update: 2023-07-12 03:42 GMT

இன்றைய மாவட்ட ஸ்பெஷல் பகுதியில்... திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கும் தக்காளி பதப்படுத்தப்படும் உணவு பூங்கா குறித்து ஒரு அலசல்...

தங்கமாக பார்க்கப்படும் தக்காளி விளையும் தோட்டம், விலையை கேட்டாலே கண்ணீரை வரவழைக்கும் சின்ன வெங்காயம் விளையும் தோட்டமும் என பசுமையாக நம்மை வரவேற்கிறது வடமதுரை மற்றும் அய்யலூர்...

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்யும் பூமி... இங்குள்ள மார்கெட்டில் நாளொன்றுக்கு சுமார் 100 டன் அளவிற்கு தக்காளி வியாபாரம் நடைபெறுகிறது.

தக்காளி மட்டுமா என்றால் இல்லை... சின்ன வெங்காயம், கத்தரிக்காய், பச்சைமிளகாய், முருங்கைக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், கொய்யா, மாம்பழம், பப்பாளி என பல காய்கறிகளும், பழங்களும் விளையுமிடம். இன்றைய தக்காளி விலையால் விவசாயிகள் மகிச்சியை பார்த்தாலும்..

கடந்த மாதம் அவர்களது நிலை பரிதாபமாக இருந்தது. தக்காளியை வாங்க ஆள் இல்லாமல் வாய்காலிலும், வெட்டவெளியிலும் கொட்டிச் சென்றார்கள். செடியிலே பறிக்காமல் விட்டார்கள், மாடுகளுக்கு உணவாக கொடுத்தார்கள்...

இப்போது இந்த பழங்களை எல்லாம் சேமித்திருந்தால், தங்களுக்கு தாங்க முடியாத நஷ்டம் ஏற்படாது, மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும் என்பதே அங்கிருக்கும் விவசாயிகள் கோரிக்கை.. எதிர்பார்ப்பு எல்லாம்...

அதற்கு அய்யலூரில் தக்காளி பதப்படுத்தப்படும் உணவு பூங்கா அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்கிறார்கள்...

2020 ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியதும், தங்கம்மாபட்டியில் 24 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி, பழங்களை பதப்படுத்தும் கிடங்கு வசதியுடன் உணவு பூங்கா அமைக்கும் பணி 2021-ல் அதிமுக ஆட்சியில் தொடங்கியது.

10 ஏக்கர் பரப்பளவில் கட்டிடமாக காட்சியளிக்கும் பூங்கா, உள்ளே இயந்திரங்கள், குளிர்சாதன வசதி, மின்சார வசதி, சாலை வசதி என எதும் இல்லாமல் 2 ஆண்டுகளாக பணி கிடப்பில் கிடக்கிறது.

மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தில் இருந்து வர வேண்டிய நிதி நிலுவையில் உள்ளதாக திட்ட பணிகள் தடை படுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைத்து வேலை முடிந்ததும், மாவட்ட நிர்வாகம் தொழில்நுட்ப குழுவை அமைத்து ஆய்வை மேற்கொண்டு உள்ளூர் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இப்போது அங்கிருக்கும் விவசாயிகள் கோரிக்கை எல்லாம் இந்த பூங்காவில் பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதாக இருக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்