தமிழக அரசு Vs கர்நாடக அரசு.. பிடிவாதம் பிடிக்கும் DKS.. துணிந்து அடிக்கும் துரைமுருகன் - மேகதாது விவகாரம்.. நடப்பது என்ன?

Update: 2023-06-02 07:28 GMT

கர்நாடக பிடிவாதமாக இருக்கும் மேகதாது அணை திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக கூறியிருக்கும் நிலையில், இவ்விவகாரத்தில் நடப்பது என்பதை விரிவாக பார்க்கலாம்...

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகப்புரா பகுதியில் உள்ளது மேகதாது.

காவிரி அருவியாக கொட்டும் ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கிறது.

இங்கு ஒரு ஆடு தாண்டும் அளவுக்கு குறுகலான இடம் வழியாக பாறைகளுக்கு மத்தியில் காவிரி ஓடிக்கொண்டிருக்கிறது.

மேகதாது என்ற கன்னட சொல்லுக்கு தமிழில் ஆடுதாண்டி என்று பொருளாகும். அர்காவதி ஆறும், சில துணை ஆறுகளும் காவிரி ஆற்றுட‌ன் சங்கமிக்கும் இடமாகும்...

இங்குதான் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அணையையொன்றை கட்ட திட்டமிட்டுள்ளது.

அணையில் 66 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து, பெங்களூருவுக்கு குழாய் மூலம் 4.75 டிஎம்சி தண்ணீரை கொண்டு செல்லவும்

400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் புனல் மின்சார நிலையம் தொடங்கவும் கர்நாடகம் திட்டமிட்டு இருக்கிறது.

தமிழகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 2018-ல் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதற்கு எதிராக தமிழகம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

2019-ல் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்தது. அப்போது தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே சுமூக உடன்பாடு எட்டினால்தான் அனுமதி வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யமுடியும் என தெரிவித்தது.

இருப்பினும் திட்டத்தில் பிடிவாதமாக இருக்கும் கர்நாடகா, விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய ஜல்சக்தி துறைக்கு அனுப்பியது. காவிரி மேலாண்மை ஆணையத் திற்கும் அறிக்கை சென்றது.

ஆனால் மேகதாது அணை குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஆணையம் மேகதாது விஷயத்தை விவாதத்திற்கு ஏற்கவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி உள்ளதா? என்ற வைகோவின் கேள்விக்கு, மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால் இதுகுறித்து விவாதம் நடைபெறவில்லை என மத்திய அரசு தெரிவித்தது.

இப்போது உச்சநீதிமன்ற இறுதி உத்தரவுக்காக காவிரி மேலாண்மை ஆணையம் காத்திருக்கிறது.

காவிரியில் கர்நாடகா பங்கு 284.75 டி.எம்.சி., இதுவே தமிழகத்துக்கான பங்கு 404.25 டி.எம்.சி. ஆகும்.

இதில் கர்நாடகம் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவு 177.25 டி.எம்.சி.

மீதம் உள்ள 227 டி.எம்.சி. பவானி, அமராவதி போன்ற காவிரியின் துணை ஆறுகளில் இருந்து கிடைப்பதாக கணக்கிடப்படுகிறது.

தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு 49 டி.எம்.சி. கொள்ளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர், 19.52 டி.எம்.சி. கொள்ளவு கொண்ட கபிணி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த அணைகளை தாண்டி பிற காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து 80 டி.எம்.சி.க்கும் அதிகமான நீர் மேட்டூருக்கு வருவதாக மதிப்பிடப்படுகிறது.

இந்த சூழலில் மேலும் 66 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்கும் அணையை கட்டினால் நிச்சயமாக தமிழகத்திற்கு தண்ணீரை கர்நாடக அரசால் தரவே முடியாது என தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இப்போது கர்நாடகாவில் அரியணையில் ஏறியிருக்கும் காங்கிரஸ், மேகதாதுவில் அணை கட்டப்படும் என வாக்குறுதி அளித்தது.

மேகதாது அணைக்காக பாத யாத்திரை மேற்கொண்ட மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், ஆட்சிக்கு வந்ததும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது பிரச்சினையை பூதாகரமாகியிருக்கிறது.

இதற்கு கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழகம் அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்

Tags:    

மேலும் செய்திகள்