குகேஷுக்கு ரூ.4.5 கோடி வரியா? இது தோனியின் சம்பளத்தை விட அதிகமா? - நெட்டிசன்களை அலற விட்ட தகவல்
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற குகேஷ்க்கு வழங்கப்பட்ட 11 கோடி ரூபாய் பரிசுத் தொகையில், வரி இவ்வளவு செலுத்த வேண்டும் என இணையத்தில் தகவல்கள் உலா வந்தது. இதன் பின்னணி என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
பதினெட்டே வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று, இளம் உலக சாம்பியனாக வலம் வரும் குகேஷ், கடந்த சில நாட்களாக இணையத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
சிங்கப்பூரில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற அவர், இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததோடு, தமிழ்நாட்டின் பெருமையையும் ஓங்கி ஒலிக்கச் செய்துள்ளார்...
குகேஷின் வெற்றியை, நாடே கொண்டாடிக் கொண்டிருக்க...சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றதன் மூலம் சர்வதேச செஸ் கூட்டமைப்பு அவருக்கு 11 கோடி ரூபாய் பரிசாக வழங்கும்.
இந்த பரிசுத் தொகை ஒரு புறம் பாராட்டை பெற்றாலும், இதற்கான வரி விதிப்பு விவரங்கள் தலைசுற்ற வைத்தது...
பரிசுத் தொகையாக பெறப்படும் தொகை, இதர வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் என கருதப்படுவதால், சுமார் 42 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என கூறப்பட்டது..
புதிய வரி விதிப்பின் கீழ், குகேஷின் பரிசுத் தொகையில் இருந்து சுமார் 39 சதவீதம், அதாவது சுமார் ரூ. 4.5 கோடி கழிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பிடிஜி அத்வயா நிறுவனத்தை சேர்ந்த அமித் பெய்ட் தெரிவித்தார்.
அதாவது பரிசுத்தொகையான 11 கோடியில் 4.5 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என தகவல் வெளியாக, அதிர்ச்சியில் உறைந்தனர் இணையவாசிகள்...
இது தொடர்பாக இந்தியாவின் வரி விதிப்பின் மீது பலர் சரமாரியாக கருத்துகளை தெரிவித்து வர, இவ்விவகாரம் பெரும் பேசு பொருளானது...
வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்காக எம்.எஸ். தோனியின் சம்பளமான 4 கோடியை விட, இந்த வரி விதிப்பு அதிகம் என கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினர்..
ஆனால், குகேஷின் பரிசுத்தொகைக்கு எந்தவித வரியும் விதிக்கப்படாது என்கிறார் ஆடிட்டர் குரு சம்பத்குமார்..
நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித வரியும் விதிக்கப்படாது எனக் கூறும் அவர், உலகளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிப் பெறுபவர்களுக்கு வரி விதிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இந்த சர்ச்சை தொடர்பான கேள்விக்கு, உலக சாம்பியன் குகேஷ் தெரிவிக்கையில், செஸ் ஒருபோதும் பணத்தைப் பற்றியது அல்ல, ஆனால் ஆர்வம் மற்றும் விடாமுயற்சியை பற்றியது என்றும், தனிப்பட்ட முறையில், நான் செஸ் விளையாடுவதற்கு பணம் காரணம் அல்ல என்றும் கூற, மீண்டும் குகேஷை கொண்டாடி வருகின்றனர் இணையவாசிகள்...