தெருவையே அலறவிட்ட மாணவியின் தாய்..மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் - சென்னை அருகே ஒரு திகில்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு பகுதியில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில், ஒரு வீட்டின் பின்புறம் உள்ள புதரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கோணிப்பை வீசப்பட்டிருந்தது. இதனைக்கண்ட வீட்டின் உரிமையாளர் முனியாண்டி, கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த கோணிப்பையை பிரித்து பார்த்தபோது, அதில் மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அந்த எலும்புகளை காவல் நிலையத்துக்கு அவர்கள் எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பிசியோதெரபி படித்தபோது வாங்கி வைத்திருந்த மண்டை ஓடு, மற்றும் எலும்புகளை, அவரது தாயார் புதரில் வீசியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.