குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு தணிக்கை... ஒரே நாளில் 529 குற்றவாளிகள் கைது - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு
சென்னையில் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு, வீடு புகுந்து திருடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு, நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த 14 குற்றவாளிகள் மீது காவல் துறை ஒரே நாளில் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களைக் கைது செய்து, நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு மற்றும் வீடு புகுந்து திருடும் குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 617 பேரை நேரில் சந்தித்து, குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. வழக்குகளில் தொடர்புடைய ஆயிரத்து 17 குற்றவாளிகளிடம் ஏற்கெனவே நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும், 529 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த 14 குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.