பனி பொழியாததால் தவிக்கும் பனிக்கரடிகள் - மனிதர்களின் செயலால் இடம் மாறி வரும் விலங்குகள்
பனி பொழியாததால் தவிக்கும் பனிக்கரடிகள் -
மனிதர்களின் செயலால் இடம் மாறி வரும் விலங்குகள்
பனி பிரதேசமான ஆர்டிக் பகுதிக்கு மிக அருகே உள்ள கனடாவின் சர்ச்சில் நகரின் இன்றைய நிலையை காட்சிப் படுத்துகிறது, இந்த செய்தி தொகுப்பு. (பனி கரடி உலாவும் காட்சி)
ஆர்டிக் பகுதியில் உள்ள ஹட்சன் விரிகுடாவுக்கு அருகே இருப்பது தான்... கனடாவின் இந்த சர்ச்சில் நகரம்.
பனிக்காலம் தொடங்க இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது... வெண்ணிற போர்வை போர்த்தி, பனி படர்ந்து காட்சியளித்திருக்க வேண்டிய இந்த இடம் இன்று... பனிப்பொழிவுக்காக காத்திருப்பது வேதனையின் உச்சம்!
ஆர்டிக் பனியில் பூக்கும் பாசி... சிறிய உயிரினங்களான மீன்களுக்கு உணவாகிறது... மீன்கள் கடல் சிங்கத்திற்கு உணவாகிறது... அந்த கடல் சிங்கத்தை தனது உணவாக்கி கொள்கிறது, பனி கரடி... இப்படி தான் ஆர்டிக் குளிர் பிரதேசத்தில் உணவு சங்கிலி பயணிக்கிறது.
ஆனால் இன்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உணவு எதுவும் புலப்படாததால்... உணவு தேடி அலைந்து அலைந்து நொந்து நூடுல்ஸாகி சோர்வாக சுற்றி கொண்டிருக்கிறது, இந்த பனி கரடி.
ஏற்கனவே புவி வெப்பமயமாதலால், 2100க்குள் பனிக்கரடி கள் அழிந்துவிடும் என ஆய்வுகள் எச்சரித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த காட்சிகள் மனிதர்களின் கூடா செயலின் விளைவு என்று தான் சொல்ல வேண்டும்.
இங்கும் சுமார் 800 பனிக்கரடிகள் உள்ளன. அதே அளவிற்கு தான் பழங்குடியின மக்களும் இங்கு வசித்து வருகிறார்கள்.. இதில் நாம் இப்போது பார்ப்பது இங்கு பிரபலமான டூரிஸ்ட் கைடு டேலிவின் குடும்பத்தை தான்.. இவர்களின் குடும்ப உறுப்பினர்களில் 46 நாய்களும் அடங்கும்.
உறைபனியில் வண்டியில் நாய்களை பூட்டி நடக்கும் நாய் சவாரி செய்ய டேலி மட்டுமல்ல... அவரது செல்லபிராணி களும் காத்திருக்கின்றன.
மற்ற பகுதிகளை விட இங்கு மூன்று மடங்கு அதிகமாக பனி உருகி வருவதாக வருந்தும் டேலி, பல விலங்குகள் வடக்கு நோக்கி நகர்ந்துவிட்டதாக கூறுகிறார்... கால மாற்றத்திற்கு ஏற்ப தற்போது மூஸ் எனப்படும் மான் வகை தான் இங்கு அதிகம் காணப்படுகிறதாம்.
ஆனால் பசியில் உணவு தேடி அலையும் பனி கரடிகள்... சர்வ சாதாரணமாக இவர்களின் வீடுகளை சுற்றி வலம் வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்,
இயற்கைக்கு மனிதன் செய்த கைமாறின் விளைவு தான்... சர்ச்சில் நகரின் இன்றைய நிலை.