"7 மாதங்களாக ஊதியம் இல்லை"கடுப்பாகி போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள் திருச்செந்தூரில் பரபரப்பு
ஆறுமுகநேரியில் உள்ள ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பால குமரேசன், தமிழக பள்ளிகளில் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு பணம் கொடுத்த ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். 3 லட்ச ரூபாய் கொடுத்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், 5 லட்ச ரூபாய் கொடுத்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் இந்த நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 7 மாதங்களாக ஆதவா அறக்கட்டளை நிறுவனத்தால் அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் பால குமரேசன் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... இதனால் ஆதவா அறக்கட்டளை அலுவலகம் முன்பு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பால குமரேசன் நேரில் வரும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.