நேரு நினைவு அருங்காட்சியகத்தில் நேரு பெயர் நீக்கி 'பிரதமர்' பெயர்.. கடும் கொந்தளிப்பில் காங்கிரஸ்

Update: 2023-06-18 03:08 GMT

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் , பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.. பெயர் மாற்ற காரணம் என்ன? அதன் மீதான விவாதம் என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.


தலைநகர் டெல்லியில் உள்ள தீன்மூர்த்தி வளாகத்தில் தான் தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ள பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைந்துள்ளது. 1948 முதல் 1964ம் ஆண்டு வரை முன்னாள் பிரதமர் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக இவ்விடம் இருந்து வந்தது.

1964ம் ஆண்டு நேருவின் மறைவுக்கு பின்னர் அவரது நினைவாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது.

தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்ட நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், நவீன மற்றும் தற்கால இந்தியா' பற்றி மேம்பட்ட ஆராய்ச்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் , இதன் துணைத்தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் பெயர் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. நேரு நினைவு அருங்காட்சியகம் நாட்டின் ஜனநாயக அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதால் அதனை பிரதிபலிக்கும் வகையில் அதன் பெயரும் அமைய வேண்டும் என நிர்வாக குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்ற நிலையில், இந்தியாவின் முதல் பிரதமரான நேரு முதல் தற்போதைய பிரதமர் மோடி வரை அனைத்து பிரதமர்களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களை பிரதிபலிக்கும் விதத்தில், நேரு என்ற பெயரை நீக்கி பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்ற முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவு மோதி அரசின் அற்பத்தனமான பழிவாங்கும் செயல் என கூறி காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வரலாறை அழிப்பதாக பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் நேருவின் அடையாளத்தை மறைப்பதாக கூறி பல்வேறு விதங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்வீட் பதிவிட்ட ஜேபி நட்டா, அருங்காட்சியகத்தில் இதுவரை பணியாற்றிய அனைத்து பிரதமர்களும் கௌரவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அத்தோடு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கருத்துக்கு பதிலளித்த அவர், ஒரு குடும்பத்தின் பாரம்பரியத்தை மட்டுமே உயிர்ப்பித்து, மற்ற பிரதமர்களின் மரபுகளை அழிக்கும் நோக்கில் காங்கிரஸ் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். இருதரப்புக்கும் வார்த்தை போர் வலுக்க... நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என மாற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்