தூத்துக்குடியில் இப்படியொரு நிலைமையா? சமூக விரோதிகளின் கூடாரமான துயரம்- கண்ணீர் விடாத குறையாக கதறும் தொழிலாளர்கள்

Update: 2023-07-23 06:52 GMT

தூத்துக்குடியில் பல ஆண்டுகளாக சலவை தொழில் செய்து வந்த இடத்தில் வணிக வளாகங்கள் அமைத்து அதிக வாடகைக்கு விடுவதால், சலவை தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

காமராஜர் ஆட்சியில் கடந்த 1957-ம் ஆண்டு சலவை தொழிலாளர்கள் தொழில் செய்வதற்காக 9.45-ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டு சலவைத்துறை கட்டிக்கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான சலவை தொழிலாளர்கள் தொழில் செய்து வந்தனர்.

நாளடைவில் இந்த இடம் பழுதடைந்த காரணத்தினால் கடந்த 2019-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சுமார் 7-கோடி ரூபாய் மதிப்பீட்டில் இவ்விடம் புதுப்பிக்கப் பட்டு மீண்டும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் மகிழ்ச்சியடைந்த சலவை தொழிலாளர்கள் ஆவலுடன் எதிர்பாத்து காத்திருந்தனர். ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் புதுப்பித்து கட்டி முடிக்கப்பட்ட இடத்திலோ, காயவைத்த துணிகளை தேய்த்து கொடுப்பதற்கான இடவசதி இல்லை என தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

துணிகளை துவைத்து அதனை காயவைக்க இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில், காயவைத்த துணிகளை தேய்த்து கொடுப்பதற்கான இடவசதி வணிக வளாகங்களுக்கு உள்ளே உள்ள கடைகளில் செய்யப் பட்டுள்ளன. இதனால் தாங்கள் பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டுள்ள நிலையில், கடை ஒன்றிற்கு அட்வான்ஸ் தொகையாக 1 லட்ச ரூபாயும் மாத வாடகையாக 7 ஆயிரம் 8 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயித்துள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிதளவு மட்டுமே சம்பாதிக்கும் சலவை தொழிலாளர்கள், டெண்டர் முறையை ரத்து செய்யக்கோரி பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் கடைகள் ஏதும் வாடகைக்கு போகாமல் பல மாதங்களாக மூடியே கிடக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை மது பிரியர்களும், சமூக விரோதிகளும் பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் சலவை தொழிலாளர்கள் இடம் மற்றும் கடை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சலவை தொழிலாளர்களுக்கு கடைகளை இலவசமாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் ஒருவேளை இலவசமாக வழங்க முடியாது என்றால், குறைந்த வாடகை நிர்ணயம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என சலவை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்