கவுன்சிலர் மகனை காதலித்ததால் மிரட்டல்... காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு...

Update: 2023-05-30 00:20 GMT

நடந்திருப்பது கொலை அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்று அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் முனுமுனுத்து கொண்டனர். ஆனால் நிச்சயம் அது கொலை தான் என்று சடலமாக மீட்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். சம்பவ இடத்தில் பதற்றம் அதிகரித்ததை உணர்ந்த போலீசார் உடற்கூறு ஆய்விற்காக சடலத்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்… உடனே குற்றவாளியை கைது செய்ய கூறி உறவினர்கள் சாலை மறியில் இறங்கியிருக்கிறார்கள்.இறந்து போனவர் தேவிகா. கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள சவாரிமேடு கிராமத்தை சேர்ந்தவர். தந்தை பிரிந்து சென்ற நிலையில் தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்துள்ளார். குடும்பத்தின் ஏழ்மை காரணமாக 11ஆம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திய தேவிகா விவசாய கூலி வேலைச் செய்துவந்துள்ளார்.

அப்போதுதான் தேவிகாவின் வாழ்க்கையில் எமன் காதல் வடிவில் நுழைந்திருக்கிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் குணசேகரன் என்பவரின் மகன் கஜேந்திரனும் தேவிகாவும் ஒருவருடமாக காதலித்து வந்திருக்கிறார்கள். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற போதும், வசதியை காரணம் காட்டி குணசேகரன் அந்த காதலுக்கு கருப்பு கொடி காட்டியிருக்கிறார். கூடவே காதலை கைவிடும் படி அந்த குடும்பத்துக்கு கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்.ஆனால், தேவிகாவால் காதலை மறக்கமுடியவில்லை… குடும்பத்தினருக்கு தெரியாமல் காதலனுடன் மறைமுகமாக செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இது காதலனின் தந்தை குணசேகரனுக்கு ஆத்திரத்தை கிளப்பியிருக்கிறது. தேவிகாவை தீர்த்துகட்டிவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு காதலனிடமிருந்து தேவிகாவின் செல்போனிற்கு அழைப்பு வந்துள்ளது. காதலனை பார்க்க தங்கையுடன் சென்ற தேவிகாவை குணசேகரனின் குடும்பத்தினர் வீட்டிற்குள் இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து பயந்துபோன தேவிகாவின் தங்கை அங்கிருந்து ஓடிவந்து வீட்டிலிருந்தவர்களிடம் தகவல் கொடுத்திருக்கிறார்… இதனால் பதறிபோன உறவினர்கள் காதலன் வீட்டிற்கு சென்று தேவிகா எங்கே என்று கேட்டிருக்கிறார்கள்… ஆனால், குணசேகரனும் அவரது குடும்பத்தினரும் தேவிகாவைப் பற்றி தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என்று கூறியிருக்கிறார்கள்.

தேவிகா மாயமானது குடும்பத்தினருக்கு பதற்றத்தை ஏற்படுத்த ஊர் முழுவதும் தேடிப்பார்த்திருக்கிறார்கள். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு தேவிகா கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். தேவிகாவின் குடும்பத்தினர் நடந்தது திட்ட மிட்ட கொலை என்று கூறிவந்தாலும், உடற்கூறாய்வு அறிக்கை முடிவில் தேவிகா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் அரசியல் பலத்தால் குணசேகரன் சூழ்ச்சி செய்வதாக நினைத்த உறவினர்கள் மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்…

தேவிகாவின் உறவினர்கள் கொடுத்த நெருக்கடியால் குணசேகரன் மற்றும் கஜேந்திரன் மீது தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்… காவல்துறையின் முழுமையான விசாரணைக்கு பிறகே தேவிகாவின் மரணத்திலுள்ள மர்மங்கள் விலகும்…

Tags:    

மேலும் செய்திகள்