பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானம்..! பின்னணி என்ன..? திக் திக் நிமிடங்கள்..!

Update: 2023-06-13 05:14 GMT

குஜராத்தின் அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் பாகிஸ்தானுக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்

அமிர்தசரசில் இருந்து அகமதாபாத் சென்ற விமானம் மோசமான வானிலையால் வழிதவறி பாகிஸ்தானுக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சனிக்கிழமை அன்று மாலை, இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் புறப்பட்டது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பறந்து கொண்டு இருந்த இந்த விமானம் திடீரென அந்த பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகி வழிதவறி பாகிஸ்தான் வான்பகுதிக்குள் நுழைந்தது.

இரவு 7.30 மணி அளவில் லாகூருக்கு வடக்கே பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்த விமானம் , லாகூருக்கு அருகே உள்ள குஜ்ரன்வாலா பகுதிக்கு சென்றது. பின்னர் 8.01 மணி அளவில் மீண்டும் இந்திய வான்பகுதிக்குள் நுழைந்தது.

சுமார் அரை மணி நேரம் பாகிஸ்தான் வான்பகுதிக்குள் பயணித்தாலும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி மீண்டும் இந்திய பகுதிக்குள் பத்திரமாக விமானம் திரும்பியதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான விமான போக்குவரத்து பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இரு நாடுகளும் தங்கள் வான்பரப்பை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளன.

இந்த சூழ்நிலையில் இங்கே விமானம் ஒன்று பாகிஸ்தான் வான் பகுதிக்குள் நுழைந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இது வழக்கத்துக்கு மாறானதல்ல எனவும், மோசமான வானிலை காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இயல்பான ஒன்று தான் என கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த மே 4-ந் தேதி மஸ்கட்டில் இருந்து லாகூர் வந்து கொண்டிருந்த பாகிஸ்தான் விமானம் ஒன்று அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக வழிதவறி இந்திய பகுதிக்குள் நுழைந்திருந்தது.

10 நிமிடங்களுக்கு பின்னரே மீண்டும் பாகிஸ்தான் வான்பரப்புக்குள் அந்த விமானம் நுழைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்