வித விதமா, ரக ரகமாக தங்க நகைகள்.. செய்கூலி இல்லை சேதாரம் இல்லை - பலே ஆஃபர்...பணத்தோடு ஓடிய ஓனர்...!
சென்னை திருவொற்றியூரில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி பல கோடி ரூபாயை ஏமாற்றியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர் அஜாக்ஸ் பகுதியில், பிரபாகரன் என்பவர் ஒரு நிறுவனத்தை தொடங்கி, குறைந்த பணத்திற்கு தங்கம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார்.
இதை நம்பி, திருவொற்றியூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அவரிடம் பணம் செலுத்தியுள்ளனர்.
ஆனால் அவர், தங்கத்தை தராமல் ஏமாற்றியதால், பாதிக்கப்பட்ட பெண்கள், திருவொற்றியூர் காவல் புகார் கொடுத்தனர். இதற்கிடையே, 7 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றியதாக நரேஷ் குமார் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.
அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்கள் திரண்டு, தங்கள் பணத்தை திருப்பித் தரும்படி கோரிக்கை விடுத்தனர்.
அவர்களை போலீசார் விரட்டியதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி, தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.