கஞ்சா கேக்..! சென்னையில் கொடிகட்டும் விற்பனை..! டாட்டூ போடவரும் ஆண்கள், பெண்கள்

Update: 2022-09-18 08:49 GMT

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் என்ற புதிய வகை போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, கஞ்சா கேக் வாங்குவது போல சென்று நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ரோஷன் என்பவரை கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் ரோஷன் நுங்கம்பாக்கத்தில் உணவக கடை நடத்தி வருவதாகவும், அவரும் அவரது நண்பரான டாட்டூக்கடை நடத்தி வரும் தாமஸ் என்பவரும் இணைந்து கஞ்சா கேக் தயாரித்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் கஞ்சா கேக்குடன் உயரக போதை மாத்திரை, உயர் ரக போதை ஸ்டாம்ப் ஆகியவற்றையும் கல்லூரி மாணவர்கள் மற்றும் டிஜே பார்ட்டிகளில் விற்பனை செய்து வந்தும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுத்தது.

விசாரணையில், அவர்கள் அளித்த தகவலின்படி காரனோடையை சேர்ந்த ஆர்க்கிடெக் பட்டதாரி கார்த்திக், பொன்னேரியைச் சேர்ந்த எம்எஸ்சி பட்டதாரி ஆகாஷ், பி.டெக் பட்டதாரி பவன் கல்யாண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அதில் ரோஷன், தாமஸ் ஆகியோர் குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி, சந்தேகம் வராதபடி கேக்குடன் இணைத்து கஞ்சா கேக் தயார் செய்துள்ளனர். கஞ்சா கேக் ஒன்று மூவாயிரம் ரூபாய் வரை கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்து, பணத்தில் கொழித்துள்ளனர்.

இதில் கார்த்திக், ஆகாஷ், பவன் கல்யாண் ஆகியோர் பெங்களூர், ஹைதராபாத்தில் இருந்து உயர்ரக போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து, ஒரு போதை மாத்திரையை ரூ.1300 க்கு வாங்கி அதனை 3000 வரையிலும், போதை ஸ்டாம்ப் ஒன்றை ரூபாய் 1000-க்கு வாங்கி அதனை 2800 வரையிலும் விற்பனை செய்துள்ளனர்.

தங்களுக்கு வாடிக்கையாளர்களாக டாட்டூ கடை நடத்தி வரும் தாமஸ் கடைக்கு டாட்டு போட வரும் ஆண்கள், பெண்களை குறி வைத்து தங்கள் வலையில் சிக்க வைத்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டாக இவர்கள் கஞ்சா கேக், உயர் ரக போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்ப் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 33 உயர் ரக போதை மாத்திரைகள், 19 போதை ஸ்டாம்புகள், 10 கஞ்சா கேக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை கஞ்சா சாக்லேட்டுகள், கஞ்சா ஆயில்கள் வரிசையில் தற்போது போதை கஞ்சாவும் இடம்பிடித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்