பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்ட மீனவர்... நெஞ்சை பதற வைக்கும் பகீர் சிசிடிவி காட்சிகள்

Update: 2023-06-28 00:30 GMT

கொல்லப்பட்டவர் கடலூர் மாவட்டம் தாழங்குடா பகுதியை சேர்ந்த மதியழகன். 45 வயதாகும் இவர் தற்போது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மஞ்சக்குப்பம் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தான் இன்று காலை அதே பகுதியிலுள்ள சிவன்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த மதியழகன் இப்படி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரனை மேற்கொண்டனர். அப்போது தான் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடூர கொலை இந்த படுபயங்கரத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. ஆம்....கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு தாழங்குடா தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார் மதியழகனின் மனைவி சாந்தி. அப்போது மதியழகன் தரப்புக்கும், தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அதே பகுதியை சேர்ந்த மாசிலாமணி தரப்புக்கும் தேர்தல் முடிவில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அதில் மதியழகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றிருக்கிறது மாசிலாமணியின் கும்பல். அடுத்த சில மாதத்ததில் மாசிலாமணியின் தம்பி மதிவாணனை கண்டக்காடு பகுதியில் வைத்து வெட்டி கொலை செய்தது ஒரு மர்ம கும்பல். அந்த கொலையை தொடர்ந்து படகுகளை எரித்தல், வீடுகளை உடைத்தல் என அந்த பகுதியே பெரும் கலவரக்காடானது. ஒருவழியாக அந்த கலவரத்தை கட்டுப்படுத்திய போலீசார், மதிவாணனின் கொலை வழக்கில் 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில் ஒருவர் தான் தற்போது இறந்து போன மதியழகன். ஆம்...முன்விரோதம் காரணமாக மதியழகன் தான் மதிவாணனை ஸ்கெட்ச் போட்டு தூக்கியதாக சொல்லப்பட்டது. அந்த வழக்கில் சிறைக்கு சென்ற மதியழகன் மற்றும் சிலர், அடுத்த சில மாதங்களில் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். ஆனால் உயிர் பயத்தில் அவர்கள் ஊருக்குள் காலடி எடுத்து வைக்காமல் உறவினர் வீட்டிலும், வெளியூரிலும் தங்கி இருந்தனர். மதியழகனும் மஞ்சகுப்பத்தில் குடும்பத்துடன் செட்டிலாகி இருக்கிறார்.எப்படியாவது ஊருக்குள் மீண்டும் செல்ல வேண்டும் என்ற ஆசையில் மதியழகன் தரப்பு தயாராக இருந்த நிலையில், மதிவாணனின் கொலைக்கு பழிவாங்க இந்த பயங்கரத்தை செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நடந்த படுபயங்கரத்தால் குலை நடுங்கி போன ஊர்மக்கள் பலரும், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஊரை காலி செய்து வெளியேறி வருகின்றனர்.

நடந்தது உண்மையிலேயே பழிக்கு பழியா...? அல்லது வேறு ஏதேனும் காரணமா...? என போலீசார் தொடர் விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி சென்ற கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். முழுவிசாரனைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

Tags:    

மேலும் செய்திகள்