மைதானத்தில் மல்லுக்கட்டிய அணிகள்.. கடைசியில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட் - விறுவிறுப்பான கால்பந்து உலகக்கோப்பை

Update: 2022-11-29 11:42 GMT

கால்பந்து உலகக்கோப்பை தொடர் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், தரவரிசையில் 21வது இடத்தில் இருக்கும் செர்பியாவும், 43வது இடத்தில் இருக்கும் கேமரூனும் அல் ஜனோப் மைதானத்தில் மல்லுக்கட்டின.

இரு அணிகளும் பெரிதும் பிரபலம் இல்லாதவை என்றாலும் மைதானத்தில் ரசிகர் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதற்கேற்ப ஆட்டமும் சுவாரஸ்யமாகவே சென்றது.

29வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை கட்சிதமாகப் பயன்படுத்தியது கேமரூன்.... மிகச்சுலபமாக கோல் அடித்தார் கேமரூன் வீரர் ஜீன் சார்லஸ்.... ரசிகர்களின் ஆரவாரத்தால் திக்குமுக்காடியது அல் ஜனோப் மைதானம்.

ஆனால் கேமரூனின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை... முதல் பாதி முடியும் தருணத்தில் பந்தை தலையால் முட்டி கோலாக்கி, வியக்க வைத்தார் செர்பிய வீரர் பாவ்லோவிக்... அடுத்த சில நிமிடங்களில் செர்கெஜ் கோல் அடிக்க, 2க்கு 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று செர்பியா பதிலடி கொடுத்தது.

2வது பாதியின் தொடக்கத்தில் சக வீரர்கள் அருமையாக பந்தைக் கடத்தித்தர, அற்புதமாக கோல் அடித்தார் செர்பிய வீரர் அலெக்சாண்டர். 3க்கு 1 என்ற கோல் கணக்கில் ஆதிக்கம் செலுத்தியது செர்பியா....

வெற்றி வாகை சூடப்போவது செர்பியாதான் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் 63வது நிமிடத்தில் திருப்புமுனை தந்தார் கேமரூன் வீரர் வின்சென்ட்... தனி ஒருவனாக பந்தை கடத்திச் சென்ற அவர், கோல் கீப்பருக்கு மேல் பந்தை லாவகமாக தட்டி கோல் ஆக்கினார்.

அடுத்த சில நிமிடங்களில் செர்பியாவின் தடுப்பு அரணை தகர்த்து, கோல் அடித்த எரிக், கேமரூன் ரசிகர்களை ஆனந்தக் கடலில் அமிழ்த்தினார்.,...

இறுதிக்கட்டத்தில் இரு அணியினரின் கோல் முயற்சிகளும் பலன் தராமல் போக, 3க்கு 3 என்ற கோல் கணக்கில் பரபரப்பான ஆட்டம் சமனில் முடிந்தது. முதல் பாதியில் பின்தங்கினாலும், 2வது பாதியில் சளைக்காமல் போராடி சமன் செய்து இருக்கிறது கேமரூன்.... 

Tags:    

மேலும் செய்திகள்