23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை-இறுதிப்போட்டியில் அதகளப்படுத்திய ஜோகோவிச்
சறுக்கும் களிமண் களம்... அனல் தகிக்கும் சுற்றுச்சூழல்... ரசிகர்களின் ஆரவாரம்... இவற்றுக்கு இடையில் ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான யுத்தம் ஆரம்பமானது. ஒரு புறம் பல கிராண்ட்ஸ்லாம்களுக்கு சொந்தக்காரரான ஜோகோவிச்.... மறுபுறம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையே தொட்டிராத நார்வே இளம் வீரர் காஸ்பர் ரூட்.... 20 ஆண்டு கால அனுபவத்தின் வெளிப்பாட்டை முதல் செட்டில் ஜோகோவிச் காண்பிக்க, அவருக்கு இணையாக ஆடினார் பெரிதும் அனுபவம் இல்லாத காஸ்பர் ரூட்... இதனால் ஆட்டத்தின் முதல் செட்டில் புள்ளிகள் இருபுறமும் மாறி மாறிச் செல்ல, இறுதியில் டை-பிரேக்கர் வந்தது. ஆனால் டை-பிரேக்கரில் அதிரடியாக ஆடி புள்ளிகளைக் குவித்த ஜோகோவிச், முதல் செட்டை 7க்கு 6 என்ற கணக்கில் வசப்படுத்தினார்...
2வது செட்டில் தனது அபாரமான ரிட்டன்களால் ரூடை திணறடித்தார் ஜோகோவிச்... மளமளவென புள்ளிகளை உயர்த்திக்கொண்டே ஜோகோவிச் சென்ற நிலையில், ரூட் செய்வதறியாது திகைத்தார். ஒரு தரப்பாக அமைந்த 2வது செட், 6க்கு 3 என்ற கணக்கில் ஜோகோவிச் வசமானது.முதல் 2 செட்களை வென்ற முனைப்புடன் 3வது செட்டை ஜோகோவிச் தொடர, சற்று மீண்டெழுந்த ரூட், ஜோகோவிச்சிற்கு ஈடுகொடுத்து போராடினார். ஆனாலும் ஜோகோவிச்சின் அனுபவத்திற்கு முன்னால் ரூடின் போராட்டம் சோபிக்கவில்லை... 7க்கு 5 என்ற கணக்கில் 3வது செட்டும் ஜோகோவிச் வசம் செல்ல, பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் ஜோகோவிச் தனதாக்கினார்.ஜோகோவிச் வெல்லும் 3வது பிரெஞ்சு ஓபன் பட்டம் இது... ஒட்டுமொத்தமாக அவரின் 23வது கிராண்ட்ஸ்லாம்... ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ஜோகோவிச்...களிமண் களத்தில் கதாநாயகனான நடால் இல்லாமல் நடப்பு பிரெஞ்சு ஓபன் தொடர் ஆரம்பித்தபோதே, ஜோகோவிச்தான் சாம்பியன் என பலரும் கணித்தனர். அது தற்போது நிரூபணமாகி உள்ள நிலையில், வர இருக்கும் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபனிலும் ஜோகோவிச்சின் கையே ஓங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை...