வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ்காக கிணறில் டைவ்... சேற்றில் சிக்கி இளைஞர் பரிதாப பலி...

Update: 2023-06-28 01:30 GMT

இறந்து போனவர் இதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலையின் மகன் சரண். கட்டிட தொழிலாளியான ஏழுமலையின் இரண்டாவது மகனான இவர் சென்னையில் உள்ள தனியார் மருந்து கம்பெணியில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏழுமலையும் அவரது சொந்தக் காரர்களும் சேர்ந்து, கரிப்பூரில் ஒரு முனீஸ்வரன் கோவில் கட்ட நினைத்திருக்கிறார்கள். இந்த கோவில் கட்டும் பணியை முனைப்போடு முன்னின்று செய்து முடித்திருக்கிறார் ஏழுமலை.கோவில் பணிகள் நிறைவடைந்து மண்டல பூஜையும் நடந்து முடிந்திருக்கிறது. அதன் பிறகு முனீஸ்வரனுக்கு ஆடு பலியிட்டு படையல் வைக்க வேண்டும் என்பது வழக்கம். ஆனால் அதை உரிய நேரத்தில் செய்யாமல் விட்டிருக்கிறார்கள் ஏழுமலையும் அவரது உறவினர்களும்.

இதனால் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் கோவிலில் பலியிட்டு படையல் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்திருக்கிறது. சாமி கும்பிடுவதற்காக, சென்னையை சேர்ந்த தனது நண்பன் ரமேஷ் என்பவரை அழைத்து கொண்டு சரண் ஊருக்கு வந்திருக்கிறார். வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்திருக்கிறது. சரண் தனது நண்பரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள விவசாய கிணற்றிற்குக் குளிக்கச் சென்றிருக்கிறார்.நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊருக்கு வந்த சந்தோஷத்திலிருந்த சரண், கிணற்றில் குளிப்பதை வீடியோவாக எடுத்து, வாட்ஸ் ஆப்பில் ஸ்டேடஸ் வைக்க நினைத்திருக்கிறார். ரமேஷை வீடியோ எடுக்கச் சொல்லிவிட்டு, கிணற்றின் சுற்றுச்சுவரிலிருந்து டைவ் அடித்திருக்கிறார் சரண்.மின்னல் வேகத்தில் நீருக்குள் மூழ்கியவர் அதன்பிறகு வெளியே வரவே இல்லை..வெகுநேரமாகச் சரண் தண்ணீருக்குள் மூழ்கி இருந்ததால் பயந்து போன அவரது நண்பர் ரமேஷ். கத்திக் கூச்சலிட்டிருக்கிறார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் குதித்து தேட தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் சரணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைந்து வந்த மீட்பு படையினர் 4 மின் மோட்டார்கள் மூலம் மொத்த தண்ணீரையும் வெளியேற்றி இருக்கிறார்கள். 6 மணி நேர தேடலுக்கு பிறகு கிணற்றின் அடியில் சிக்கியிருந்த சரணின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. சடலத்தை பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கோவிலுக்குப் பலி கொடுக்க தாமதமானதால் தான், இந்த பயங்கரம் நடந்திருப்பதாக ஊர் முழுவதும் ஒருவித அமானுஷ்ய அச்சம் குடிகொள்ள தொடங்கிவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்