"கோரமண்டல் விபத்துக்கு காரணம்" - உண்மையை உடைத்த ரயில்வே அமைச்சர்

Update: 2023-06-04 16:46 GMT

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப் பெரும் விபத்து நிகழ்ந்து.... உலகையே உலுக்கி இருக்கும் இந்த கோர ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ நெருங்கி உள்ளது. மேலும் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக சம்பவ இடத்தில் ஆய்வு செய்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கு மீட்பு பணியில் இருக்கும் தொழிலாளர்களை பாராட்டினார், பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,

மின்னணு இணைப்பு மாற்றத்தால் தான் இந்த விபத்து நடந்து இருப்பதாகவும்,விபத்திற்கான காரணம் மட்டுமின்றி, காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம் எனவும், விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார் என்றும் தெரிவித்தார். தற்போது மீட்பு பணிகளில் கவனம் செலுத்துவதாகவும், ஒடிசா பாகநாகா ரயில் நிலைய வழித்தடத்தில் புதன்கிழமை முதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் வருவதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார்.

ரயில் விபத்து குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஒடிசாவில் கோரமெண்டல் ரயில் விபத்து தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விசாரணையை இரு மாதங்களுக்குள் நிறைவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், கவாச் பாதுகாப்பு முறையை அமல்படுத்த கோரியும் பொதுநல மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்