சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் பகுதியில் நேருக்கு நேர் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் பலியான நிலையில், சைக்கிளிங்கைத் தடை செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சைக்கி ளிங் செல்வதால் இருவழி சாலை ஒருவழி சாலையாக மாற்றி விடப்படும். இதை அறியாமல் கோவளம் திசையில் இருந்து ஒருவரும், ஈஞ்சம்பாக்கம் திசையில் இருந்து ஒருவரும் இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில், பனையூர் அருகே திடீரென்று எதிர்பாராத விதமாக இருவாகனங்களும் பலமாக மோதியதில் வடலூரைச் சேர்ந்த சரண் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த மற்றொருவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பலியானார். சைக்கிளிங் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாக பனையூர் மக்கள் இசிஆர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்து வைக்கப்பட்டது. விபத்தில் இறந்த சரணின் உடலை தர மறுத்து பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.