மாறும் சினிமா ட்ரெண்டிங்...இந்தி ரீமேக்கில் பிளாக்பஸ்டர் படங்கள்...காத்திருக்கும் மீம் கிரியேட்டர்ஸ்

Update: 2023-07-16 08:04 GMT

இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கவிட்ட பல படங்கள், இந்தியில் ரீமேக்காகும் நிலையில், ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

புது புது கதையம்சங்களுடன் தென்னிந்திய சினிமா புதிய உயரத்தை நோக்கியே நகர்ந்து வருகிறது. ஆஸ்கர் விருது பெற்ற தெலுங்கு திரையுலகின் ஆர்.ஆர்.ஆர்., பாகுபலி, தேசிய விருதுகளை அள்ளி குவித்த தமிழின் சூரரை போற்று, மக்களின் கவனத்தை ஈர்த்த கன்னட படங்களான காந்தாரா, கே.ஜி.எஃப்., மலையாள படமான அய்யப்பனும் கோஷியும் போன்றவை அதற்கான சான்றாகவே திகழ்கிறது.

இப்படி பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்து தெறிக்க விட்ட படங்களை, பாலிவுட்டில் தனது பாணியில் களமிறக்க பல இயக்குநர்கள் முயற்சித்து வருகின்றனர். அந்த முயற்சியில் பெரும் தோல்வியை சந்தித்தது வீரம் படத்தின் இந்தி ரீமேக். சல்மான் கான், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான, "கிஸி கி பாய், கிஸி கி ஜான்" படம் இந்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல், தமிழ் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தையே பெற்றது. வீரத்தை கோரமாக்கியதாக சரமாரியாக விமர்சித்தனர் தமிழ் ரசிகர்கள்.

இதே போல் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியும், இந்தி ரீமேக்கில் பலமான அடி வாங்கியது. இதனால் தென்னிந்திய படத்தை இந்தியில் ரீமேக் செய்து சொதப்பினால், வறுத்தெடுக்க ரசிகர்கள் காத்து கொண்டிருக் கின்றனர்.

இந்நிலையில் தென்னிந்தியாவில் பட்டையை கிளப்பிய பல படங்கள் இந்தியில் ரீமேக்காகவுள்ளது.

2005-ல் வெளியாகி தற்போது வரை பேசப்படும் அந்நியன் திரைப்படம் இந்தியில் ரீமேக்காகவுள்ளது. ரன்வீர் சிங் நடிக்கும் இப்படம், கதை உரிமம் காரணமாக கிடப்பில் உள்ளது. ஆனால் இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அனைத்து தரப்பு ரசிகர்களிடையில் அதிகமே.

அப்படி தான் தமிழ்நாட்டில் ஹிட் அடித்த சூரரை போற்று திரைப்படம் சூர்யா தயாரிப்பிலியே இந்தியில் தயாராகி வருகிறது. சூர்யாவின் கதாபாத்திரத்தில், அக்‌ஷய் குமார் நடித்துள்ள நிலையில், படம் திரையை தழுவ காத்திருக்கிறது.

விஜய்-லோகேஷ் காம்போவில் திரையுலகை கலக்கிய மாஸ்டர் திரைப்படமும் இந்தி ரிமேக் லிஸ்டில் உள்ளது. நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி அசத்திய ரோல்களை, சல்மான் மற்றும் ஷாஹித் நடிக்கவுள்ளனர்.

இல்லத்தரசிகளின் இன்னல்களை தெளிவுப்படுத்திய தி கிரேட் இந்தியன் கிட்சன் திரைப்படம் இந்தியில், சன்யா மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாகவுள்ளது. மலையாளத்தில் அனல் பறக்கவிட்ட அய்யப்பனும், கோஷியும் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அர்ஜுன் கபூர், ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளனர்.

ஏற்கனவே, ஜெர்சி, விக்ரம் வேதா, தெலுங்கு திரைப்படமான அல வைகுண்டபுரம்லோ திரைப்படங்கள் தென்னிந்தியாவில் கொடிக்கட்டி பறந்த நிலையில், இந்தி ரீமேக்கில் போட்ட முதலை கூட எடுக்க முடியாமல் போனது.

இதே போல் இனி வரும் திரைப்படங்களும், ஹிட் ஆகுமா அல்லது மீம்ஸ் போடும் கண்டென்ட் ஆகுமா என்பதை பார்க்க, தென்னிந்திய ரசிகர்கள் கீபோர்டுகளுடன் தயாராக காத்திருக்கிறார்கள்!

Tags:    

மேலும் செய்திகள்