கோவை மாவட்டம் சூலூர் அருகே, தொழில் போட்டியில், சொந்த தம்பி மகனையே கழுத்தை நெறித்துக் கொன்ற சகோதரியின் கொடூர செயலை விளக்குகிறது இந்த தொகுப்பு...
சூலூரில் உள்ள கலங்கள் பகுதியில் இயங்கி வரும் பஞ்சாலை மில்லில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர், தனது மனைவி மற்றும் 7 வயது மகன் என, குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
7 வயது சிறுவன் மில்லில் தங்கி வேலை செய்யும் மற்ற சிறுவர்களுடன், தினந்தோறும் விளையாடுவது வழக்கம்... அப்படி விளையாடிக் கொண்டிருந்த வேளையில், திடீரென மாயமான சிறுவன், மில்லிற்கு அருகேயுள்ள வனப் பகுதியில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான்.
சிறுவன் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், தந்தைக்கு தகவல் தெரிவிக்கவே, அங்கு வந்த அவர் மகனை கட்டித் தழுவி கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினார்.
தகவலின் பேரில் வந்த போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததால், போலீசார் தங்களது பாணியில் விசாரித்தபோது, பகீர் தகவல்கள் வெளியாகின.
அதில், சிறுவனின் கழுத்தை நெறித்துக் கொன்றது, அவனது அத்தையான நூர் ஜா கத்தூன் என அதிர்ச்சி தகவல் வெளியானது.
ஜாகிர் உசேனின் அக்காவான நூர் ஜா கத்தூன், அசாமில் இருந்தபோது, வேலையில்லாமல் தவித்து வந்துள்ளார்.
இதனால் தனது சகோதரியை கோவைக்கு வரவழைத்த ஜாகிர், தான் பணியாற்றும் மில்லிலேயே கடந்த ஆண்டு வேலை வாங்கி கொடுத்துள்ளார்.
இதனிடையே, மில்லில் ஆர்வத்துடன் வேலை செய்து வந்த ஜாகிர் உசேனுக்கு, மில்லின் உரிமையாளர் புதிதாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். இதனை நூர் ஜா கத்தூனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை... எப்படியாவது அந்த வீட்டிற்கு பிற்காலத்தில் உரிமையாளராக ஆகி விட வேண்டும் என்ற எண்ணத்தில், ஜாகிர் உசேனின் மகனை கொன்று, இந்த கொடூர செயலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது.
அதனைத் தொடர்ந்து, நூர் ஜா கத்தூனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.