திருப்போரூர் முருகன் கோயிலில், காணிக்கை தலை முடிகளை சேகரிப்பதற்காக நடைபெற்ற ஏலம் நிராகரிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரிலுள்ள கந்தசுவாமி கோயிலில், பிரசாத விற்பனை உரிமம் உள்ளிட்ட பல்வேறு உரிமங்களுக்கு ஏலம் நடைபெற்றது. இதில் கடந்தாண்டு 59 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன முடி காணிக்கை சேகரிப்புக்கான உரிமம், இந்தாண்டு வெறும் 30 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதனையடுத்து அந்த ஏலத்தை மட்டும் நிராகரித்த கோயில் நிர்வாகம், அதனை விளம்பரம் செய்து மறு ஏலம் விடுவதற்காக ஒத்தி வைத்தது. மேலும் ஆடு, கோழி சேகரித்து கொள்ளும் உரிமம் மற்றும் சிதறு தேங்காய், உப்பு உள்ளிட்டவற்றை சேகரித்துக் கொள்வதற்கான உரிமம் ஆகியவற்றை யாரும் ஏலம் கேட்காததால், அவற்றுக்கான ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற உரிமங்களுக்கான ஏலம் மூலம் 52 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.