இறந்த பின்னும் கூட தீராத சாபம்.. உடலோடு 3 நாளாக நடந்த சோகம்.. கலங்கி நிற்கும் கடவுள் தேசம்
கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கி வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த ஒரு வார காலமாக தீவிரமடைந்த மழையானது, பல்வேறு மாவட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடும் மழையை எதிர்பாராத நிலையில், பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கூடவே ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், முறிந்து சேதமானது.
வெளுத்து வாங்கிய மழையால் பல வீடுகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. பேரிடர் மீட்பு குழுவினரும் தங்களால் முடிந்த அளவு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை நிவாரண முகாம்களில் சேர்த்தும் வருகின்றனர். மொத்தமாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்... இப்படியாக ஒட்டுமொத்த கேரளாவையும், உலுக்கி எடுத்த மழையானது தற்போதுதான் குறையத்துவங்கியிருக்கின்றது. இந்த நிலையில்தான் இறந்த முதியவர் ஒருவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு கூட செய்ய விடாமல் மழை தடை செய்து வந்தது.
கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருப்பதுதான் அப்பர் குட்டநாடு பகுதி. கனமழை பெய்த போது, மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த இடமும் ஒன்று. ஊரைச்சுற்றி, வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நின்று, மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் இருக்கும், பெரிங்கரையைச் சேர்ந்த 73 வயதான குஞ்சுமோனுக்கு மழையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமும் பார்க்க முடியாமல், அவருக்கு வேண்டியவற்றையும் செய்ய முடியாமல், அவரது குடும்பத்தினர் தவித்து போனார்கள். முதியவர் குஞ்சுமோனின் உடல்நிலை மோசமான நிலையில், கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். அவரின் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கியிருந்தது. உடலை வெளியில் கொண்டு சென்று தகனம் செய்ய முடியாத அளவிற்கு தண்ணீர் சூழ்ந்திருந்தது. வேறு வழியில்லாமல் மழை நின்று தண்ணீர் குறைந்தபின், இறுதிச் சடங்கு செய்யலாம் என்ற நிலைக்கு வந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி, மழை நீர் குறைந்தபாடில்லை. இனிமேலும் உடலை வீட்டில் வைத்திருக்க முடியாது என்பதால், மழை நீரை பொருட்படுத்தாமல், இறுதிச் சடங்குகளை அய்யனவேலி பாலத்தின் அருகில் உள்ள சாலையில் வைத்து முடித்தனர். இறந்தவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு கூட செய்ய முடியாத அளவிற்கு கடவுள் பூமியை, கலங்க வைத்திருக்கிறது இந்த மழை.....