22 நிமிடத்தில் 47 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (12.07.2023)
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், இஞ்சி விலை கிலோ 260 ரூபாய்க்கும், பூண்டு விலை கிலோ 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பட்டாணி விலை கிலோ 200 ரூபாய்க்கும் பீன்ஸ் கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 300 நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்கப்படும் என கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது. முதலமைச்சர் உத்தரவின்படி, பொதுமக்கள் நலனுக்காக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் விளையாட்டு, குதிரை பந்தயம் உள்ளிட்டவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படுவதாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கான இறக்குமதி மருந்து, அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கவும், திரையரங்கு உணவகங்களில் விற்கப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று சத்தியாகிரக போராட்டம் நடத்துகின்றனர். அனைத்து மாநில தலைநகரங்களிலும் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடைபெற உள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் மட்டும் இன்று நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை காங்கிரஸ் கட்சி ரத்து செய்துள்ளது. அந்த 4 மாநிலங்களிலும் வரும்16ஆம் தேதி போராட்டம் நடைபெறும் எனவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.