அனைவருக்கும் இணையதள சேவை கிடைக்கும் நோக்கத்தில், குறைந்த விலையில், 'பிராட்பேண்ட்' இணையதள சேவையை கேரள அரசு துவங்கியுள்ளது.
இதையடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இணையதள சேவை வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது. கேரளாவில், 'பிராட்பேண்ட்' இணைய தள சேவையை மாநில அரசு தொடங்கியுள்ளது. 'கேபான்' எனப்படும், 'கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். மாநிலத்தில் 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த இணையதள சேவை மற்றவர்களுக்கு குறைந்த விலையில் அளிக்கப்பட உள்ளது. இந்த, 'பிராட்பேண்ட்' திட்டத்தில், குறைந்தபட்சமாக மாதம் 299 ரூபாய்க்கு 20 MBPS வேகத்தில், 3,000 GP வரை இலவசமாக 'டவுன்லோட்' செய்து கொள்ளலாம்.
இதற்காக, கேரளா முழுதும் 1,500 கோடி ரூபாய் செலவில், 35,000 கி.மீ., துாரத்திற்கு, 'பைபர் ஆப்டிக் கேபிள்' வசதி செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 30,000 அரசு அலுவலகங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட உள்ளது.