சைபர் கிரைமில் புதுவித மோசடி.. இன்ஸ்டாவில் திரைப் பிரபலங்களே குறி.. வாட்சப்பில் ஆப்பாக வரும் கிப்ட் கூப்பன்..

Update: 2023-03-03 09:10 GMT
  • தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை போல, சைபர் குற்றங்களின் வளர்ச்சியும் நாளுக்குநாள் பெருகிக் கொண்டே செல்கிறது. புதுபுது விதங்களில், பொதுமக்களின் பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் சூறையாடி வருகிறது. ஏடி.எம் கார்டு, பான் கார்டு, ஓடிபி என தொடங்கி, தற்போது பாஸ் ஸ்கேம், லிங்க் ஸ்கேம், போலி ஐடி என பல்வேறு விதங்களில், இணையத்தில் மோசடிகள் உலா வருகின்றன.
  • அந்த வகையில், சமீபத்தில் புதுவிதமான சைபர் கிரைம் மோசடியை, மர்ம கும்பல் அரங்கேற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த மோசடியில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் போன்றோரின் பெயர்களை பயன்படுத்தி, சைபர் கிரைம் மோசடி கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
  • பேஸ்புக்கில் காவல்துறை அதிகாரிகளின் ஐடியை போல உருவாக்கி, அந்த ஐடி மூலமாக நட்பு வட்டாரங்களை ஏற்படுத்தி, உடனடியாக பணம் தேவைப்படுகிறது எனக்கூறி மர்மகும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகிறது.
  • மேலும் ஒரு படி சென்று, வாட்ஸ் அப்பில் பாஸ் ஸ்கேம் என்ற பெயரில், போலியாக டிபியை வைத்து, கிப்ட் கூப்பன் லிங்கில் பணம் அனுப்புமாறு கூறி பணமோசடியில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
  • மாவட்ட ஆட்சியர்கள், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் கட்சி பிரமுகர்களின் பெயரில் இந்த மோசடி சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இந்த மோசடியில், மணிமுத்தாறு காவலர் ஒருவர் ஏழரை லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.
  • இந்த நிலையில், சமீபத்தில் சைபர் கிரைம் மோசடி கும்பலின் பார்வை, திரை பிரபலங்கள் மீது திரும்பியுள்ளது. முகநூல், வாட்ஸ் அப் என தாண்டி, தற்போது இன்ஸ்டாகிராமில் இந்த கும்பல் பணம் பறிக்க தொடங்கி உள்ளது.
  • நடிகரும், இயக்குனருமான ரவி மரியா பெயரில், போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி, அந்த ஐடி மூலமாக, மருத்துவ தேவை போன்ற பல காரணத்தைக் கூறி, அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோசடியில் சிக்கிய ஒருவர் 7 ஆயிரம் ரூபாய் இழந்தது தெரியவந்ததை அடுத்து, இதுதொடர்பாக, நடிகர் ரவி மரியா தென்மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
  • இதேபோல், திரைப்பட பாடலாசிரியர் விவேகா, நடிகர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் பெயரிலும், போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆரம்பித்து, பண மோசடியில் மர்மகும்பல் ஈடுபட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
  • இந்த சம்பவம் தொடர்பாக, தென்மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பான விசாரணையில், குறைவான பாலோயர்களை கொண்ட திரைப் பிரபலங்களை மட்டுமே குறிவைத்து, இந்த மோசடியை மர்ம கும்பல் அரங்கேற்றி வருவதை போலீசார் கண்டறிந்தனர். அதிக பாலோயர்கள் இருந்தால், பணம் கேட்டால் உஷாராகி விடுவார்கள் என்பதால், இது போன்று குறிப்பிட்ட நபர்களை மட்டும் மோசடி கும்பல் டார்க்கெட் செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெரும்பாலும் இது போன்ற மோசடி செயலில் வடமாநில கும்பல் ஈடுபடுவதால் பொதுமக்கள் உஷாராக இருக்கும் படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்