பெண்கள் பேசவோ, சத்தமாக பாடவோ, வாசிக்கவோ கூடாது...உலகே அதிரும் வித்தியாச நாடு... வரும் புதிய சட்டம்
ஆப்கானிஸ்தானில் ஆண்களுக்கும்... பெண்களுக்கும் தலிபான் அரசு கொண்டு வந்திருக்கும் ஆடை கட்டுப்பாடுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் ஷரியா சட்டத்தின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. பெண் கல்வி அடியோடு ஒழிக்கப்பட்ட வேளையில் புதிது புதிதாக யோசித்து தலிபான்கள் சட்டம் கொண்டு வருகிறார்கள். இப்போது தலிபான் அமைப்பில் அதிகாரமிக்க தலைவரான கைபதுல்லா அகுந்ஸாடா உத்தரவில் ஆண்கள், பெண்களுக்கு ஒழுக்கநெறி சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
பெண்கள் முழு உடலையும் மறைக்கும் வகையில் ஆடையை அணிய வேண்டும். மெல்லிய, குட்டையான மற்றும் இறுக்கமான ஆடைகளை பெண்கள் அணியவே கூடாது. முகத்திரையை முழுவதுமாக மறைத்து வைத்திருக்க வேண்டியது கட்டாயம். இரத்த பந்தம், திருமண பந்தம் இல்லாத ஆண்களிடம் இருந்து உடல், முகத்தை முழுவதும் மறைக்க வேண்டும். பொதுவெளியில் பெண்கள் பேசக்கூடாது. பெண்கள் சத்தமாக பாடவோ, வாசிக்கவோ கூடாது. ஆண்களை பார்க்கவே கூடாது.
இதுபோல் ஆண்களுக்கும் கட்டுபாடுகள் வந்துள்ளது. பெண்களின் உடல்களையோ, முகங்களையோ ஆண்கள் பார்க்கக் கூடாது என சொல்கிறது தலிபான் ஒழுக்கநெறி சட்டம்... இந்த சட்டம் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கானது. ஆண்கள் சிகை அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது.
முகச்சவரம் செய்ய தடை, ட்ரிம் செய்ய தடை, தாடி நீளமாக இருக்க வேண்டும். ஆண்கள் டை கட்ட தடை என சட்ட விதிகள் சொல்கின்றன.
இதுமட்டுமா என்றால் இல்லை... இல்லை என லிஸ்ட் நீளுகிறது. ஆம்... ஆண் துணை இல்லாமல் வரும் பெண்களை டாக்ஸி டிரைவர்கள் ஏற்றிச் செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் காரில் அருகருகே இருந்து பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை, விலங்குகள் என உயிரினங்களை புகைப்படம் எடுக்க, வைத்திருக்க, வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை வைத்திருப்பதற்கும் தடை என சொல்லப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே பத்திரிகையாளர்கள் படம் எடுப்பது பெரிய பாவம் என சமீபத்தில் தலிபானின் கல்வித்துறை அமைச்சர் சொல்லியிருந்தார். அப்போது, ஊடக ஊழியர்கள் தாடியை எடுப்பதை நிறுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த சட்ட விதிகளை அமல்படுத்தும் பொறுப்பு மொஹ்டாசபீன்களுக்கு அதாவது ஒழுக்கநெறி காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் ஒழுங்காக சட்டத்தை பின்பற்றாதவர்களை பிடித்துக் கொண்டு நீதிமன்றத்தில் ஒப்படைப்பது இவர்களுடைய பொறுப்பாகும். இப்படி கடந்த ஆண்டில் மட்டும் ஒழுக்கநெறியை மீறியதாக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அவர்கள் பிடித்து வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சட்டமெல்லாம் ஆப்கான் எதிர்காலத்தை இருளடிக்கும் என ஐ.நா. கண்டனம் தெரிவித்ததற்கு, எங்கள் சட்டங்கள் குறித்து முழுமையான புரிதல் இல்லாத ஆணவம் என பதிலடி கொடுத்திருக்கிறது தலிபான் தரப்பு...
இந்த சட்டங்கள் இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது...
ஏற்கனவே ஆடை.. சிகை அலங்காரங்களுக்கான கட்டுப்பாடுகளுக்கு பெயர் போன வட கொரியாவுக்கே தலிபான் 'டப்' கொடுக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்...