குறைவாக மது அருந்தினாலும் பாதகம் -மருத்துவ ஆய்வு தகவல்
குறைவாக மது அருந்தினாலும் பாதகம் ஏற்படும் என மருத்துவ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தினமும் சிறிய அளவில் சிகப்பு ஒயின் அருந்துவது இதயத்திற்கு நல்லது என பரவலாக நம்பப் படுகிறது. ஆனால் சமீபத்தில் வெளியான மருத்துவ ஆய்வறிக்கையில், மிகக் குறைவாக மது அருந்தினாலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.1990 முதல் 2016 வரை, 26 ஆண்டுகளில், 195 நாடுகளில் நடத்தப்பட்ட மிக விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அறிக்கையை, 'தி லேன்செட்' என்ற பிரபல மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.
2016ல் 2 சதவீத பெண்களும், 7 சதவீத ஆண்களும் மது பழக்கத்தால் மரணம் அடைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.15 முதல் 49 வயது வரையிலானவர்களின் மரணங்களில்12 சதவீதம் மதுவினால் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தினமும் ஒரு பெக் மது அருந்தினால், 24 வகையான நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு, அரை சதவீதம் அதிகம் இருக்கும் எனவும் அதுவே, 2 பெக் மது அருந்தினால் 7 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் ஐந்து பெக் மது அருந்தினால் 37 சதவீதம் நோய் தாக்குதல் சாத்தியம் அதிகரிக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.