ஆட்சியர் ஆர்டருக்கே லஞ்சம்... வாங்கும்போது சிக்காமல்... திருப்பி கொடுத்து சிக்கிய VAO
மானாமதுரை அருகே கீழநெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி - ராஜேஸ்வரி தம்பதியரின் மாற்றுத்திறனாளி மகள் சரண்யா, தந்தை காலமானதை அடுத்து, படிப்புக்காக மதுரைக்கு தனது தாயாருடன் சென்றார். படிப்பு முடிந்து ஊர் திரும்பியபோது வீடு முற்றிலும் சேதமடைந்திருந்தது. அதுகுறித்து தந்தி டிவியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், வீடு கட்டுத் தர ஆணை பிறப்பித்து தற்போது அந்த வீட்டில் சரண்யாவும், தாயும் வசித்து வருகின்றனர். இந்நிகழ்வுக்கு முன்பு, பூர்வீகமாக தங்கியிருந்த இடத்திற்கு பட்டா கோரியபோது கிராம நிர்வாக அலுவலர் ராக்கு, மூன்றாயிரம் ரூபாயை ஜி-பேயிலும், மீதம் ஆயிரம் ரூபாயை கையிலும் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சரண்யாவின் தாயார் ராஜேஸ்வரி கொடுத்த பணத்தை கேட்டபோது அலைக்கழித்து வந்ததால், காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி வீட்டிற்குச் சென்று ராக்கு, நான்காயிரம் ரூபாயை கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், லஞ்சம் வாங்கிய செய்தி தெரியவந்ததால், வி.ஏ.ஓ ராக்குவை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.