பஞ்சாபில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்காக, சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக, சிபிஐ கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் வழக்குப்பதிவு செய்தது. அதனடிப்படையில், கார்த்தி சிதம்பரம், முன்னாள் ஆடிட்டர் பாஸ்கர ராமன் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகை மீது விசாரணை நடத்த அனைத்து முகாந்திரமும் உள்ளதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் கூறினார். அதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், அவருடைய முன்னாள் ஆடிட்டர் உள்ளிட்ட 8 பேரை, ஏப்ரல் 5- தேதி ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர்.