JustIn || வடலூரில் தொல்லியல்துறையினர் இன்று ஆய்வு

Update: 2024-05-07 05:52 GMT

வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் தொல்லியல் துறையினர் ஆய்வு.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை 100 ஏக்க நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

இங்கு வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது.

இதற்கு அப்பகுதி மக்களும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பார்வதிபுரம் கிராம மக்கள் வள்ளலார் சர்வதேச மையம் 100 ஏக்க நிலப்பரப்பில் தற்போது 40 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை கையகப்படுத்தி அதில் சர்வதேச மையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

மற்ற அரசியல் கட்சியினர் வேறு இடத்தினை தேர்வு செய்து அங்கு வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது தொல்லியல் துறையினர் சர்வதேச மையம் கட்டும் இடத்தினை ஆய்வு செய்து மே 10 தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவையடுத்து தமிழக அரசும் தொல்லியல் ஆய்வுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையின் பெருவெளியில் நடைபெற்று வந்த கட்டுமானப்பணியை மே 10ந் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்திருந்தது.

இன்று மாநில தொல்லியல் துறை இணை இயக்குனர் டாக்டர்.சிவானந்தன் தலைமையில் மாநில தொல்லியல் துறையின் ஆலோசகர் தயாளன்,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர் டாக்டர் செல்வகுமார் அடங்கிய 3 பேர் கொண்ட குழு இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்