சென்னையை அதிர வைத்த மாணவனின் முடிவு-ரெய்டில் மிரண்ட போலீசார்- சிக்கிய பிரபல பல்கலை., ஸ்டூடென்ட்ஸ்
போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் சிக்கிய பல்கலைக்கழக மாணவர், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, கஞ்சா புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தாம்பரம் மாநகர காவல் துறையை சார்ந்த போலீசார் திடீரென கஞ்சா ரெய்டில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, அக்குடியிருப்பில் இருந்து கஞ்சா, ஹுக்கா, உள்ளிட்ட பல்வேறு வகையான போதை பொருட்கள் மாணவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 18 மாணவர்களை கைது செய்து காவல்நிலையம் மற்றும் நீதிமன்ற ஜாமினில் விடுவித்தனர்.
இதில் ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் நிகில் எனும் 20 வயதான கல்லூரி மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த தகவல் மாணவனின் பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது..
இதுகுறித்து ஸ்ரீநிவாஸ் நிகிலை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீநிவாஸ் நிகில், தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதைக்கண்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஸ்ரீநிவாஸ் நிகிலை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் உட்படுத்தப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.