"ரூ.20 லட்சத்துக்கு புதிய ரூபாய் நோட்டு.." போலீஸ் போல வந்து செய்த செயல்.. தட்டி தூக்கிய காவல்துறை
நாமக்கல்லை சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் நந்தகுமார் என்பவருக்கு திருப்பூர் கனியாம்பூண்டியை சேர்ந்த இலக்கியச்செல்வன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், இலக்கியச்செல்வன் தன்னிடம் ரூபாய் 20 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை செலவு செய்தால் தான் சிக்கிக் கொள்வேன் எனவும், பழைய ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் கொடுத்தால், புதிய ரூபாய் நோட்டுகளை கொடுப்பதாக நந்தகுமாரிடம் கூறியுள்ளார். இதை நம்பிய நந்தகுமார் 10 லட்சம் பணத்தை கொடுத்து மாற்ற முயன்றுள்ளார். அப்போது, திடீரென போலீஸ் போல வந்த 3 பேர் பணத்தை வாங்கி கொண்டு காரில் தப்பி சென்றுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த நந்தகுமார் திருமுருகன் பூண்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இலக்கிய செல்வனுடன் வந்த பாலா மற்றும் போலீஸ் போல நடித்து பணத்தை பறித்து கொண்டு தப்பிய மீசை மணி உள்பட3 பேரை கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான இலக்கியச் செல்வனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.