மீண்டும் கருணாபுரமா..? நஞ்சு கலந்த மது... மருத்துவமனையில் இருவர்... போலீசாருக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் - திருப்பூர் அருகே பரபரப்பு

Update: 2024-07-01 14:17 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, நஞ்சு கலந்த மதுவை குடித்து இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மஞ்ச நாயக்கன் புதூரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரனும் கடந்த 28 ஆம் தேதி வாந்தி மற்றும் கடும் வயிற்றுக்குப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மாவடைப்பு மலைவாழ் கிராமத்தில்... இருவரும் நஞ்சு கலந்த மதுவை வாங்கி குடித்ததாக குற்றம்சுமத்தப்பட்டது. உடனடியாக, மாவடைப்பு மலைவாழ் கிராமத்துக்கு விரைந்த திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட காவல்துறையினர், கிராம மக்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில், பெண்கள் சிலரிடம் காவலர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த மக்கள் காவல்துறையினரை கிராமத்துக்குள் அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஊர் தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு கிராமத்தில் சோதனை நடத்திய காவலர்கள் , சோதனையில் ஏதும் கிடைக்காமல் திரும்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், மாவடைப்பு மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவர் மீது தற்போது கோவை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரு கள்ளச்சராயம் குடிக்க வில்லை என திருப்பூர் மாவட்ட காவல்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்க நிலையில், கோவை போலீசாரின் இந்த வழக்குபதிவு மாவடைப்பு மலைவாழ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்