முத்திரை இல்லாத பொருட்கள்.. வீட்டோடு சீல் வைத்த அதிகாரிகள்.. தி. மலையில் பரபரப்பு

Update: 2024-07-28 12:59 GMT

திருவண்ணாமலை வந்தவாசியில் இலவச சேலை தயாரிப்பில் முறைகேடு செய்ததாக சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டை நெசவாளர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

பொன்னூர் கிராமத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் தமிழக அரசுக்கு

இலவச சேலைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன...

இந்த சேலைகளுக்கான நூலினை அரசிடமிருந்து கூட்டுறவு சங்கம் பெற்று நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு சங்கத்தின் கீழ் அந்த கிராமத்தில் இயங்கும் 100க்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் விசைத் தறிகள் மூலம் சேலைகள் நெய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சேலைகள் நெய்ய தேவையான நூலினை சில நெசவாளர்களுக்கு மட்டும் வழங்கிய கூட்டுறவு சங்கம், பிற நெசவாளர்களுக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு பற்றாக்குறையாக நூல் தரப்படுவதாக கூட்டுறவு சங்கத்தினர் நெசவாளர்களிடம் தெரிவித்து வந்துள்ளனர்.

ஆனால் தேவையான நூலை அரசு வழங்கிய போதும் அவற்றை சில நெசவாளர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு மீதியை வெளி மார்க்கெட்டில் விற்று விடுவதாக தகவல் கிடைத்துள்ளது...

திருத்தணி அருகே இருந்து குறைந்த விலையில் சேலைகளை கொள்முதல் செய்து வந்து கூட்டுறவு சங்க முத்திரை இடுவதற்கு வந்தவாசி கொசத் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக நெசவாளர்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து நெசவாளர்கள் வீட்டை முற்றுகையிட்டனர்...

தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு சென்று வீட்டை சோதனை செய்தபோது 1500க்கும் மேற்பட்ட முத்திரை இல்லாத சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்