சேலம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த கனகராஜ் - சத்யபிரியா தம்பதியரின் மூத்த மகன் நவீன், ஆயில்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் பயிலும் ஷஸ்மித் என்ற 5 வயது சிறுவனிடம், பேருந்தில் சென்றபோது, நவீன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுவனின் தந்தை முத்து, தனது சகோதரர் வினோத் மற்றும் நண்பருடன், கனகராஜ் வீட்டிற்குச் சென்று சம்பவம் குறித்து கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் வினோத் பட்டாக்கத்தியால் தாக்கியதில் கனகராஜ் காயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வினோத், முத்து மற்றும் குணா ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் முத்து தரப்பினர் அளித்த புகாரின் பேரில் கனகராஜின் மனைவி உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கனகராஜ் தகராறில் ஈடுபட்டு தனது சகோதரர் முத்துவை தாக்கியதால், ஆத்திரத்தில் கத்தியால் கனகராஜை குத்தியதாக வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார்.