கனிம வளங்கள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், தமிழகத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கனிம வளங்கள் எடுப்பதில் ராய்லடி மீது மாநிலங்கள் வரி வசூலிப்பது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுக்கு கனிமங்கள் மீது வரிவிதிக்க முழு அதிகாரம் உள்ளதாக உத்தரவிட்டது. மத்திய அரசு மற்றும் சுரங்க ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனங்களிடம் இருந்து 2005 ஏப்ரல் முன் தேதியிட்டு தொகையை வசூலிக்கவும், 2026 ஏப்ரல் தொடங்கி 12 தவணையாக வசூலித்துக்கொள்ளவும் மாநிலங்களை உச்சநீதிமன்றம் அனுமதித்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக கனிம வளங்கள் நிறைந்த ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, தமிழகம் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி கணக்கீட்டு பணிகளை அம்மாநிலங்கள் தீவிரமாக தொடங்கியுள்ளன.
இதில் ஒடிசாவுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் அம்மாநிலத்திற்கு வரும் நாட்களில் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் வரியாக கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆந்திராவுக்கு நிலுவை தொகையாக 6 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
அந்தவகையில் தமிழகத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் கணக்கீட்டு பணியை முழுவதும் முடித்ததும், முழு தொகை தெரியவரும் என கூறப்படுகிறது. அதுபோக வரவிருக்கும் நாட்களில் கனிம வளங்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியால் தமிழகத்திற்கு அதிக வரி வருமானம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.