மதுரை வடக்குமாசி பகுதியை சேர்ந்த 75 வயது லட்சுமி சுரேந்தர் சாமியாராக அறியப்படுகிறார்...சிவகங்கை அடுத்த மேலவானியங்குடியில் உள்ள தஞ்சாவூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆசிரமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார். அவருக்கு உடல் நலன் பாதிக்கப்பட்ட நிலையில், உரிய சிகிச்சையளிக்காமல் அவரைக் கட்டாய ஜீவ சமாதிக்காக ஆசிரமத்தில் வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், அவரை குருவாக நினைத்து வணங்கி வந்த மதுரையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சாமியாரைக் காண ஆசிரமம் வந்துள்ளார்... ஆனால் ஆசிரம நிர்வாகிகள் அவரை அனுமதிக்காத நிலையில், அதிர்ச்சியடைந்த அவர், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்திற்கு புகார் தெரிவிக்கவே உடனடியாக போலீசுக்கு தகவல் பறந்தது... தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சாமியார் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சாமியார் உயிரிழந்துள்ளார்... வழக்கமாக டிசம்பரில் அவர் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நிலையில், அவ்வாறு விரதம் இருக்கையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும், ஆசிரம நிர்வாகிகள் அழைத்த போது அவர் சிகிச்சைக்கு மறுத்து விட்டதாகவும் ஆசிரமத்தினர் கூறியுள்ளனர். சாமியாரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..